― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் குறைப்பு-இபிஎஸ் குற்றச்சாட்டு 

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகள் குறைப்பு-இபிஎஸ் குற்றச்சாட்டு 

- Advertisement -
974211

 மகளிருக்கு இலவச பயணத்தை அறிவித்துவிட்டு, தமிழகம் முழுவதும் பேருந்துகளின் எண்ணிக்கையை அரசு குறைத்து உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,”தமிழகத்தில் திராவிடம் சார்பில், அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் நல்லாட்சி புரிந்திருக்கிறார்கள். தொடர்ந்து, எனது தலைமையிலான அதிமுக அரசு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, முப்பெரும் தலைவர்களின் வழியில் நல்லாட்சி தந்தது. தற்போது நடைபெற்று வரும் தி.மு.க ஆட்சியைப் போல், எடுத்தேன், கவிழ்த்தேன் என்ற ஒரு துக்ளக் தர்பார் ஆட்சியை நம் நாடும் கண்டதில்லை; நம் மாநிலமும் கண்டதில்லை. நிலையற்ற மனநிலையில், காலையில் ஒரு உத்தரவு பிறப்பிப்பதும், மாலையில் அதனை மாற்றியமைப்பதும் என்று சடுகுடு ஆட்டம் காட்டுகிறார்கள்.

அரசு போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடி மகளிரை ஓசியில் பயணம் செய்பவர்கள் என்று பொருள்படும்படி கேலி பேசினார். போக்குவரத்துக் கழகங்கள் மக்களுக்காக இயங்கி வரும் ஒரு சேவைத் துறை. நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்ட அரசு நிதியை வழங்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியாக பல கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

தமிழக அரசுக்கு பல்வேறு துறைகளின் மூலம் வருமானம் வரும் நிலையில், அரசு பேருந்துத் துறை நஷ்டத்தில் நடப்பதாகக் காரணம் காட்டி, கிராமப்புற பேருந்துகளை நிறுத்தும் இந்த மக்கள் விரோத அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆட்சிக்கு வந்து 24 மாதங்கள் முடிவடைய உள்ள நிலையிலும், இதுவரை ஒரு புதிய பேருந்தைக் கூட இந்த திமுக அரசு வாங்கவில்லை. இதுதான் இந்த நிர்வாகத் திறனற்ற அரசின் சாதனை.

பொங்கல், தீபாவளி, கோடை விடுமுறை நாட்கள், நவராத்திரி விடுமுறை நாட்கள் என்று அரசு விடுமுறை தொடர்ச்சியாக வரும் நாட்களில், அதிமுக ஆட்சிக் காலங்களின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர் கோயம்போடு பேருந்து நிலையத்திற்குச் சென்று, தொடர்ச்சியாக 24 மணி நேரத்திற்குமேல் அங்கேயே இருந்து, தமிழகத்தில் எந்தெந்த நகரங்களுக்கு மக்கள் அதிகமாக பயணிக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து உடனுக்குடன் அந்த நகரங்களுக்கு அதிக எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்குவார்கள். மேலும், ஓரிரு நாட்களுக்கு முன்னதாகவே முக்கிய நகரங்களுக்கு பேருந்து சேவைகளைத் துவக்கிவிடுவார்கள்.

அதேபோல், தலைமைச் செயலாளர் மற்றும் துறை செயலாளர்கள் மூலம் தென்னக ரயில்வே துறையை தொடர்புகொண்டு, சிறப்பு பயணியர் ரயில்களையும் இயக்குவதற்கு அதிமுக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் காரணமாக, பண்டிகை மற்றும் தொடர்ச்சியான விடுமுறை நாட்களில் பொதுமக்கள் தங்களது ஊர்களுக்கு பாதுகாப்பாக பயணம் செய்வது அதிமுக ஆட்சியில் உறுதி செய்யப்பட்டது.

கடந்த 29.4.2023 – சனிக் கிழமை அன்று, அனைத்து ஊடகங்களும் தமிழகத்தின் தலைநகராம் சென்னை கோயம்பேட்டில், சென்னையில் இருந்து தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக பெருமளவு மக்கள் பேருந்துக்காக விடிய விடிய காத்திருந்ததையும், கைக் குழந்தை மற்றும் வயதானவர்களுடன் எந்தவிதமான அடிப்படை வசதியும் இன்றி இரவு முழுவதும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே ஏப்ரல் 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் இரவு தங்கியதையும் நேரடியாக ஊடகங்கள் ஒளிபரப்பு செய்தன. போக்குவரத்துத் துறை அமைச்சர் எங்கே இருந்தார் என்றே தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை. நிர்வாகத் திறமையற்ற முதல்வர் ஊடகங்களைப் பார்த்தாவது இந்நிகழ்வை தெரிந்துகொண்டாரா என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில், 3.5.2023 அன்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் வெளிப்படையாகவே, மகளிரின் இலவச பயணத்தால் பேருந்துகள் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, தமிழகத்தில் பொரும்பாலான கிராமப் புறங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன என்று தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் ஒரு புதிய பேருந்து கூட வாங்காமல், ஏற்கெனவே சென்னையில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் என்று கூறிய இந்த அரசு, தற்போது ஓட்டுநர்கள் குறைவாக உள்ளனர்; எனவே, நடத்துநர்களுக்கு வேலையில்லை என்று கடந்த சில நாட்களாக அரசு நடத்துநர்களுக்கு பணி வழங்காமல் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன. இந்நிலையைப் பார்க்கும்போது, பேருந்து சேவையை தனியாருக்கு தாரை வார்க்க இது போன்ற சித்து விளையாட்டுகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறை என்பது ஒரு சேவைத் துறை. இதில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக, ஏதேனும் மறைமுகத் திட்டத்தோடு இந்த அரசு செயல்பட்டால், அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. எனவே, உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி, மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,100SubscribersSubscribe
Exit mobile version