
மன்னராகப் பிறந்து ஆசையைத் துறந்த மகான் புத்தர் மக்களுக்காக வாழ்வை அர்ப்பணித்த திருநாள் இந்த புத்த பூர்ணிமா திருநாளாகும்.
ஆசையைத் துறந்து அமைதியின் சின்னமாக தற்போது வரை மக்கள் மத்தியில் வாழ்ந்து வரக்கூடியவர் புத்தர். புத்தர் அவதரித்த தினமும் ஞானம் கிடைத்த நாளும் புத்த பூர்ணிமா திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. உலக அளவில் பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்ட பௌத்தர்களின் திருநாளாக இது கொண்டாடப்படுகிறது. குறிப்பாக ஆசிய நாடுகளில் இந்த திருநாள் கொண்டாடப்படுகிறது.
கௌதம புத்தரின் பிறந்த நாளான இன்று இந்தியாவின் துணைக் கண்டமான சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், லடாக், டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் மிகப்பெரிய அளவில் இந்த புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் வைசாக மாதம் பௌர்ணமி நாளன்று இந்த புத்த பூர்ணிமா திருநாள் கொண்டாடப்படுகிறது. தனது இறுதிக் காலத்தில் அண்ணல் அம்பேத்கர் பௌத்த மதத்தைத் தழுவினார். இந்திய விடுதலைக்குப் பின்னர் சட்ட அமைச்சர் ஆக அம்பேத்கர் இருந்தபோது ஆண்டுதோறும் இந்த திருநாள் பௌத்த நெறியாளர்களுக்கு அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
இந்த புத்த பூர்ணிமா திருநாளில் புத்தரைப் பௌத்தர்கள் வழிபாடு செய்வார்கள். புத்தர் கோயிலுக்குச் சென்று வேண்டுதல் செய்பவர்கள் மற்றவர்களுக்குப் பொருட்களைத் தானமாக வழங்குவது வழக்கம். இந்த திருநாளில் விரதம் இருந்து தியானம் செய்து புத்தரைப் பௌத்தர்கள் வழிபடுவார்கள்.
இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள கயா என்ற இடம் பௌத்த மதத்திற்கு முக்கிய ஸ்தலமாக விளங்குகிறது. அது மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள பல முக்கியமான இடங்களும் உள்ளன. புத்த கையா என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் புத்தருக்கு ஞானம் கிடைத்ததாக இன்றுவரை நம்பப்படுகிறது.
புத்தரின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அனைத்தும் இந்த புத்த பூர்ணிமா திருநாளில் நிகழ்ந்ததாகப் பௌத்தர்கள் அனைவரும் நம்புகின்றனர். அதன் காரணமாகவே இந்த திருநாள் மிகவும் சிறப்புப் பெற்ற நாளாகக் கொண்டாடப்படுகிறது.
அழகு இந்த வாழ்க்கையில் நிரந்தரமற்றது எனப் புரிந்த புத்தர், அரண்மனை, மனைவி, குழந்தை ராஜ வாழ்வு என அனைத்தையும் துறந்து விட்டு ஒரு இருண்ட இரவில் தனது வீட்டை விட்டு வெளியேறினார்.
தனது கேள்விகளுக்குப் பதில் தேடி பல்வேறு ஆசிரமங்களுக்குக் கௌதம புத்தர் சென்றார். உண்மையைக் கண்டறிய ஒரே வழி தியானம் தான் என்று உணர்ந்தார். பனாரஸ் அருகே உள்ள போத்கயா என்ற காட்டிற்குச் சென்று போதி மரத்திற்கு அருகே அஜபாலா என்னும் ஆலமரத்து நிழலில் தியானத்தில் அமர்ந்தார்.
பல இடையூறுகளைத் தாண்டி 49 நாட்கள் தியானத்தில் ஈடுபட்ட புத்தருக்கு ஞானோதயம் கிடைத்தது. மனிதர்களையும் துன்பத்திலிருந்து விடுவிக்கும் நோக்கத்தைக் கண்டறிந்த புத்தர், புத்த மதத்தை நிறுவினார். ஆசையும் துன்பமுமே இந்த உலகத்தில் உள்ள எல்லா துன்பங்களுக்கும் முக்கிய காரணம் என்ற கருத்தை மனிதனுக்கு எடுத்துரைத்தார்.
கௌதம புத்தர் பிறந்து 2500 ஆண்டுகள் கடந்தும் இன்று வரை அவரது போதனைகள் சாகாமல் வாழ்ந்து வருகிறது என்றால் புத்தர் வாழ்கிறார் என்று தான் அர்த்தம். இந்த புத்த பூர்ணிமா திருநாளில் துன்பங்களை போக்குவதற்கு நமது ஆசையைக் குறைத்துக் கொள்ள முயற்சி செய்வோம் என்கிறார்கள் புத்தரை வழிபடுவோர்.