
பொள்ளாச்சி அருகே, டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஆய்வு என்ற பெயரில், அதிகாரிகள் படை சூழ வனத்துறை அமைச்சர், ‘போட்டோ ஷூட்’ நடத்தினார். இதற்கு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வியாழக்கிழமை ஆய்வு செய்துள்ளார்.
காலை, 11:00 மணிக்கு கிளம்பி, வனத்துறை வாகனத்தில் வலம் வந்தார். வரும் வழியிலும், ஒவ்வொரு இடத்தில் நின்று, ‘போட்டோ ஷூட்’ நடத்தினார்.
முகாமிற்கு வந்து, சில நிமிடங்களில் ஆய்வை முடித்து கிளம்பினார். அவருடன் வந்த குழுவினர், முகாமில் இருந்து சிறிது துாரத்தில் வாகனத்தை நிறுத்தினர்.
அப்போது, ‘ட்ரோன்’ பறக்க விட்டு, ‘ஸ்டைலாக போஸ்’ கொடுத்த அமைச்சர், அங்கு இருந்த அதிகாரிகளை கேமரா பார்க்க வேண்டாம்; பேசிக்கொண்டு இருப்பதை போல நில்லுங்கள்’ எனக்கூறினார். அதன்படி, அதிகாரிகளும் போஸ் கொடுத்தனர்.
ஒவ்வொரு இடமாக வாகனத்தை நிறுத்தி, போட்டோ எடுத்தனர். அதிகாரிகளும் எதையும் சொல்ல முடியாமல் கையை பிசைந்தனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர்; இன்னும் பல கிராமங்களில் மின் வசதி, குடிநீர் கூட கிடைக்காத நிலை உள்ளது. இதையெல்லாம் கவனிக்காமல் அமைச்சர், வனத்தில், போட்டோ ஷூட்நடத்தியது வேதனை அளிக்கிறது. ஆய்வு என்ற பெயரில், அதிகாரிகளையும் அழைத்துக்கொண்டு ‘போட்டோ ஷூட்’ நடத்தியது, கேளிக்கையாக உள்ளது. இதெல்லாம், விதிமீறல் இல்லையா, வனக்குற்றத்தில் பதிவு செய்ய மாட்டார்களா, இதுதான், திராவிட மாடல் ஆட்சியா?’ என்றனர்.