ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டவிரோதமாக மண் மற்றும் மணல் அள்ளுவதை தடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வாகனத்தை ஏற்றுவது போல் கொலை முயற்சி நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியகுளம் கண்மாயில் சட்டவிரோதமாக மண் மற்றும் மணல்களை இன்று பத்துக்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் மண்ணள்ளிக் கொண்டு நகர் பகுதியில் அதிவேகமாக வருவதாகவும் சாலையில் செல்பவர்கள் அச்சத்துடன் செல்வதாகவும் பொது மக்களிடையே புகார் எழுந்தது.
இதனை அடுத்து பெரியகுளம் கண்மாய்க்கு சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் தலைமையில் அதிமுகவை சேர்ந்த மாணவரணி செயலாளர் பெருமாள்பிச்சை மற்றும் அதிமுகவினர் மண் மற்றும் மணல் அள்ளுவதை தடுத்தனர்.
அப்போது மண் அள்ளுபவர்கள் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதிமுகவினரை தாக்க முற்பட்டு அப்படித்தான் மண் அள்ளுவோம் உங்களால் முடிந்ததை பாருங்கள் என்று மிரட்டல் விடுத்தனர்.
இதனை அடுத்து வட்டாட்சியர்,காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தும் சம்பவ இடத்திற்கு அரசு அதிகாரிகள் தற்போது வரை வரவில்லை
பின்னர் மண் அள்ளி வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சாலையில் முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்கார்ந்திருந்த போது வாகனத்தை வைத்து ஏற்றுவது போல் கொலை முயற்சி செய்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பின்னர் மண் மற்றும் மணல் அள்ளுவது சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
இது குறித்து முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் நீதிமன்றத்தை நாடுவதாக சொல்லிவிட்டு சென்ற பிறகு மீண்டும் மண் மற்றும் மணல் கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.