செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அருகே உள்ள நீலமங்கலம் கிராமத்தில் சாஸ்திராலயம் ஆசிரமத்தில், பாரத மாதா கோயில் கட்டப்பட்டுள்ளது. 300 டன் எடை கொண்ட ஒரே கல்லால் ஆன 9 அடி உயர பாரத மாதா சிலை அகண்ட பாரத வரைபடத்துடன் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம், சித்ரா பௌர்ணமி தினமான மே 5ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில், ஆர்.எஸ்.எஸ்., தேசியத் தலைவர் மோகன் பாகவத், விஷ்வ ஹிந்து பரிஷத் சர்வதேச செயல் தலைவர் அலோக் குமார், சாஸ்திராலயம் ஆசிரமத்தின் நிறுவனர் சுவாமி பிரம்ம யோகானந்தா உள்பட பலர் பங்கேற்றனர்.
பாரத மாதா வேடமணிந்த நூற்றுக்கும் அதிகமான சிறுமியர், பாரத மாதா சிலைக்கு தீபராதனை காட்டினர்.
இந்த விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், “மொழி, உணவு, உடை, வழிபாட்டு முறைகள் என, பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும், இந்தியா எப்போதும் ஒரே நாடு தான்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “இமயம் முதல் ஹிந்து சமுத்திரம் வரை உள்ள, இந்த பாரத நிலப்பரப்பு இறைவனால் நிர்ணயிக்கப்பட்டது. நிலப் பரப்பில் இந்தியா பல நாடுகளாக பிரிக்கப்பட்டு இருந்தாலும், தர்மத்தால் அகண்ட பாரதமாகவே உள்ளது. ‘உலகிற்கு வழிகாட்டியாக இந்தியா இருக்கும்’ என, மகான் அரவிந்தர் கூறினார். நாட்டின் மீது நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். அந்த நம்பிக்கை, நம் நாட்டை விட்டுப் பிரிந்து சென்றவர்களை திரும்பி வர வைக்கும்.
இங்கு வசிக்கும் முஸ்லிம்கள், பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு செல்லாமல், இந்தியா எங்கள் நாடு என்று வாழ்ந்து வருகின்றனர்.
உண்மை, அன்பு, தூய்மை, தவம் ஆகிய நான்கு தூண்களில் இந்தியா நிற்கிறது. அகண்ட பாரதம் உருவாக வேண்டும் என்பதற்கான அடையாளமாகவே பாரத மாதா சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது” என்றார்.