கும்பகோணம் வட்டம், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழாவையொட்டி தேரோட்டம் நடைபெற்றது.
ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரைப் பெருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். நிகழாண்டு கடந்த மாதம் 28ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, விழாக்காலங்களில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. பிரதான விழாவான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது.
தேரில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தார். இதில் அரசு தலைமை கொறடா கோ.வி.செழியன், எம்பி செ.ராமலிங்கம் மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
தொடர்ந்து 7-ம் தேதி காலை நடராஜர் – சிவகாமியம்மாள் மாணிக்கவாசகர் தேர்க்கால் பார்த்தல், ஊடல், திருவீதியுலா மற்றும் தீர்த்தவாரியும், 8-ம் தேதி சுவாமிகள் விழா முடிந்து யதாஸ்தானம் செல்லுதலும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளைத் துணை ஆணையர் தா.உமா தேவி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.