அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி, 2022-23 கல்வியாண்டுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் தளம் வாயிலாக நடத்த திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்படி, பொது மாறுதல் கலந்தாய்வு மே 8-ல் தொடங்கி 31-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாளில் மலைச்சுழற்சி மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும், அதன்பின் தொடக்க,நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைக்க கடந்த 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், 2022-23ம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு, நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்படுவதாகவும், மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.