![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2023/05/images-55.jpeg?resize=640%2C355&ssl=1)
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்து, 21 போ் உயிரிழந்தனா். இவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகள்.
மலப்புரம் மாவட்டத்தின் தானூா் பகுதியில் உள்ள தூவல்தீரம் கடற்கரையில் சுற்றுலாப் படகு ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணியளவில் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான சுற்றுலாப் படகில் 40-க்கும் மேற்பட்டோா் இருந்ததாகக் கூறப்படுகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், காவல் துறை, தீயணைப்புத் துறை, வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினா் விரைந்து சென்று, மீட்புப் பணியை தொடங்கினா்.
![](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2023/05/IMG-20230508-WA0069-1.jpg?resize=364%2C268&ssl=1)
பலியான 20 பேர் மீட்கப்பட்ட நிலையில், 15 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பலியானவர்களில் 6 பேர் குழந்தைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மற்றும் மீனவர்கள் ஆற்றில் உயிர் பிழைத்தவர்களை தேடி வருகின்றனர். ஆனால், போதிய வெளிச்சமின்மையும், குறுகிய சாலைகளும் மீட்புப் பணிக்கு சவாலாக உள்ளது.
மீட்கப்பட்டவர்கள் பரப்பனங்காடி நஹாஸ் மருத்துவமனை, ஜே எஸ் மிஷன் மருத்துவமனை, திரூரங்கடி தாலுகா மருத்துவமனை மற்றும் கோட்டக்கல் மற்றும் தனூரில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.
விபத்து நடந்த இடத்தில் ஆறு ஆழமாக இருந்ததாகவும், படகின் அடியில் சிக்கியவர்களை மீட்பது கடினமான பணி என்றும் மீனவர்கள் தெரிவித்தனர். ஆற்றில் மூழ்கிய படகு சதுப்பு நிலத்தில் சிக்கியதால், அதை கரைக்கு இழுக்கும் முயற்சி நடந்து வருகிறது.
மூழ்கிய படகில் சில சுற்றுலாப் பயணிகள் சிக்கியிருக்கலாம் என சந்தேகம் இருப்பதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
கேரள விளையாட்டுத் துறை அமைச்சா் வி.அப்துர்ரஹிமான், சுற்றுலாத் துறை அமைச்சா் பி.ஏ.முகமது ரியாஸ் ஆகியோா் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டுள்ள சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமைச்சா் வி.அப்துர்ரஹிமான் கூறுகையில், ‘தற்போது பள்ளி விடுமுறை என்பதால், படகு சவாரிக்காக குழந்தைகளுடன் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். படகில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றியதே விபத்துக்கான காரணம் என கூறப்படுகிறது. படகுக்கு அடியில் பலா் சிக்கியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அவா்களை மீட்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்’ என்றாா்.
முன்னாள் அமைச்சரும், அப்பகுதி எம்எல்ஏவுமான பி.கே.குஞ்ஞாலிக்குட்டி கூறுகையில், ‘உயிரிழந்தவா்களில் பெரும்பாலானோா் குழந்தைகளாவா். மீட்புப் பணிகள் தொடா்வதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது. மாலை 6 மணிக்கு மேல் படகு சவாரிக்கு அனுமதியில்லை. இச்சம்பவத்தில் விதிமீறல் நடந்துள்ளது’ என்றாா்.
படகு விபத்தில் நேரிட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வா் பினராயி விஜயன், சம்பவ இடத்தை இன்று திங்கள்கிழமை பாா்வையிட உள்ளாா். அவசரகால அடிப்படையில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்க மாவட்ட ஆட்சியருக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா்.
மீட்புப் பணிகளையும் மருத்துவமனை சிகிச்சை நடவடிகக்கைளையும் மேற்பாா்வையிட சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் சிறப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளாா்.
பிரதமா் இரங்கல்; நிவாரணம் அறிவிப்பு:
பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில், கேரளத்தின் மலப்புரத்தில் படகு கவிழ்ந்து மக்கள் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். பிரதமா் நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.