12ம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவி நந்தினி 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
திண்டுக்கல் பாரதி புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சரவணகுமார், பாலப்பிரியா தம்பதியின் மகள் நந்தினி. திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலை பள்ளியில் 12ம் வகுப்பு படித்தார். இன்று தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல் , வணிகவியல், கணக்குப்பதிவியல், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களிலும் 100 மதிப்பெண்கள் எடுத்து மொத்தமாக 600 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.
நந்தினி கூறியதாவது; என் தந்தை கூலித்தொழிலாளியாக வேலை பார்க்கிறார். நான் வீட்டிலிருந்தே என்னுடைய தேர்வுக்கு பாடங்களை படித்து தயார் செய்தேன். அதுமட்டுமில்லாமல் எனக்கு என் அப்பா, அம்மா, பாட்டி உள்ளிட்ட அனைத்து உறவுகளும் ஊக்கம் கொடுத்தனர்.
என்னுடைய தமிழ் ஆசிரியர் அனுராதா எனக்கு இன்னொரு அம்மா போல் திகழ்ந்தார். எந்த சந்தேகம் எப்பொழுது ஏற்பட்டாலும் அதை தீர்த்து வைக்க சலிப்பு இல்லாமல் எனக்கு உதவி செய்வார். தன்னம்பிக்கை இருந்தால் யார் வேண்டுமானாலும் வாழ்வில் சாதனைகளை படைக்கலாம்.
நான் ஆடிட்டர் படிப்பை படிக்க இருக்கிறேன். அதை என் தந்தை படிக்க வைக்க தயாராக இருக்கிறார். இந்த வெற்றியை நான் என் பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். இவ்வாறு நந்தினி கூறினார். இன்று காலை அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவி நந்தினிக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.