Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

spot_img

சற்று முன் :

சினிமா :

spot_img

ஆன்மிகம்:

― Advertisement ―

Homeசற்றுமுன்அழகர்கோவிலுக்கு திரும்பினார் அழகன் கள்ளழகர்..

அழகர்கோவிலுக்கு திரும்பினார் அழகன் கள்ளழகர்..

images 64

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவிட்டு கள்ளழகர் நேற்றிரவு மலைக்குப் புறப்பட்டு சென்றார்.

மதுரை அருகே அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி திருவீதி உலாவுடன் தொடங்கியது. மே 3-ல் அழகர்மலையிலிருந்து சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்குப் புறப்பட்டார். மே 4-ல் மதுரை மாநகர எல்லை மூன்றுமாவடியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து வரும் எதிர்சேவை நடந்தது.

மே 5-ம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் ஆண்டாள் மாலையை சூடிக்கொண்டு, கருப்பணசாமி கோயிலில் உத்தரவு பெற்று ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அன்று அதிகாலை 5.52 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார்.

987587

கள்ளழகர் பச்சைப் பட்டு உடுத்தி வந்தால் நன்கு மழை பெய்து சுபிட்சம் உண்டாகும் என்பது நம்பிக்கை. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில் மட்டும் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

பின்னர், ராமராயர் மண்டபம் சென்ற கள்ளழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். அன்றிரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் தங்கினார். கள்ளழகருடன் பெரும் பக்தர்கள் கூட்டம் இருந்துகொண்டே இருந்தது. மே 6-ல் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளித்தார். அன்றிரவு இரவு 9 மணியளவில் ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதாரம் நடந்தது. பின்னர் அங்கிருந்து புறப்பாடாகி இரவு தல்லாகுளம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் தங்கி நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பூப்பல்லக்கில் எழுந்தருளினார். இதில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

பின்னர் கருப்பணசாமி கோயில் முன் வையாழியாகி தல்லாகுளம் பெருமாள் கோயிலுக்கு காலை 6.30 மணிக்கு சென்றார். அங்கிருந்து மண்டகப்படிகளில் எழுந்தருளி இரவு 7 மணியளவில் மூன்று மாவடி சென்றடைந்தார். இரவில் கடச்சனேந்தல், சுந்தரராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் தங்கினார். இன்று அதிகாலை புறப்பட்டு காலை 10.30 மணிக்கு அழகர்கோவிலைச் சென்றடைகிறார்.

கள்ளழகர் வந்து சென்ற 5 நாட்களும் மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. நகரம் இரவும், பகலும் பரபரப்புடனே காணப்பட்டது. மதுரை மாநகரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் கள்ளழகர் எழுந்தருளினார்.

இதில் சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டது வேறு எந்தத் திருவிழாவிலும் இல்லாத ஒன்று என பக்தர்கள் கூறினர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் வெங்கடாசலம், கோயில் துணை ஆணையர் மு.ராமசாமி தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.