12-ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று (மே 12) காலை வெளியாகின. இதில் 87.33 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 5.38 சதவீதம் குறைந்து விட்டது.
மத்திய அரசின் சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 10.45க்கு வெளியாகின. இதில் 87.33 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டில் 92.71 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்திருந்தனர்.
கடந்த ஆண்டில், இதே நாளில் 10ம் மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளன. மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் முதல், இரண்டம், மூன்றம் இடங்களை வழங்கும் நடைமுறையை இந்தாண்டு நீக்கவும் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “மாணவர்களிடையே தேவையில்லாத போட்டியை உருவக்கும் மனநிலையை தவிர்க்கும் பொருட்டு சிபிஎஸ்இ எந்த தகுதி பட்டியலையும் வெளியிடாது, என்றாலும் பல்வேறு பாடங்களில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 0.01 சதவீத மாணவர்களுக்கு தகுதி சான்றிதழ்கள் வழங்கப்படும்” என தெரிவித்தார். இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.gov.in மற்றும் cbse.nic.in என்ற இணைய தளங்களில் பார்த்துக்கொள்ளலாம்.