
ஆந்திராவில் விளை நிலத்தில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி 4 யானைகள் உயிரிழந்தது. இரு யானைகள் உயிர் தப்பியது.
ஒடிசாவில் இருந்து வந்த யானைகள் கூட்டம் ஆந்திராவில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றித் திரிந்து வந்தன.
ஒடிசாவில் இருந்து வந்த 6 யானைகள், பார்வதி மன்யம் மாவட்டம் பாமினி மண்டலத்தில் உள்ள கிராமங்களில் சுற்றித் திரிந்தன. வனத்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் யானைகளிடம் இருந்து பயிர்களை காக்க விவசாயிகள் மின்வேலி அமைத்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்த யானைகள் கூட்டம் விவசாய வயல்களில் அமைக்கப்பட்டு இருந்த மின்வேலியில் சிக்கி இன்று காலை 4 யானைகள் உயிரிழந்தன.
மின்வேலியில் சிக்கிய மேலும் 2 யானைகள் மயிரிழையில் உயிர் தப்பின. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தின் குப்பம் பகுதி தமிழக மாநில எல்லையில் உள்ளது.
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய 3 மாநில எல்லைகளில் உள்ள வனப்பகுதியில் இருந்த யானைகள் கூட்டம் இந்த குப்பம் பகுதியில் நடமாடும் வண்ணம் இருக்கும். இன்று காலை குப்பம் பகுதியில் உஷா என்ற பெண்ணையும் சப்பாணிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவரும் யானை தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து யானைகள் கூட்டத்தை தமிழக எல்லை பகுதியில் அனுப்புவதற்கான பணியில் வனத்துறை அதிகாரிகளும் கிராம மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.