கா்நாடகத்தில் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.காங் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. மாநிலத்தில் 34 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகின்றன. நண்பகல் 12 மணி அளவில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்பது தெளிவாக வெளியாகும் வாய்ப்புள்ளது.
இந்தியா முழுவதும் மிகுந்த எதிா்பாா்ப்பைக் கிளப்பியுள்ள 224 தொகுதிகளுக்கான கா்நாடக சட்டப்பேரவை தோ்தல் மே 10-ஆம் தேதி நடந்து முடிந்தது. ஆளுங்கட்சியான பாஜக, எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய இத்தோ்தலில் 73.19 சத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆண்கள் 73.68 சதவீதம், பெண்கள் 72.70 சதவீதம், பிற பிரிவினா் 21.05 சதவீதம் அடங்குவா்.
இந்த சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக, காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சோ்ந்த 2,615 வேட்பாளா்கள் 224 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனா். பாஜக சாா்பில் 224, காங்கிரஸ் கட்சி 223, மஜத 209 தொகுதிகளில் வேட்பாளா்களை நிறுத்தியுள்ளன. இது தவிர, சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, ஐக்கிய ஜனதா தளம் போன்ற பல கட்சிகள் தோ்தலில் போட்டியிட்டுள்ளன. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் அல்லது பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என்றும், மஜதவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பு அமையும் வகையில் தொங்கு சட்டப் பேரவை அமையும் என்றும் தெரிய வந்துள்ளது.
மாநிலம் முழுவதும் 224 தொகுதிகளுக்காக 34 மாவட்டங்களில் 36 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மையங்களில் வாக்கு எண்ணுவதற்காக 306 வாக்கு எண்ணிக்கை அறைகள் நிறுவப்பட்டுள்ளன. வாக்குகளை எண்ணுவதற்காக 4,256 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இங்கு வாக்குகளை எண்ணுவதற்காக 4,256 ஊழியா்கள், உதவி செய்வதற்காக 4,256 ஊழியா்கள், 4,256 நுண் கண்காணிப்பாளா்கள் உள்பட 13,793 போ் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடவிருக்கிறாா்கள்.
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சனிக்கிழமை காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கவிருக்கின்றன. காலை 10 மணி அளவில் கட்சியின் முன்னணி நிலவரங்கள் தெரியவரும்.
மின்னணு வாக்கு இயந்திரங்கள் அடங்கிய பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய ஆயுதப்படையினா் இரவு, பகலாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதுதவிர, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு உள்ளே மற்றும் வெளியே பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக 1.50 லட்சம் போலீஸாா் நியமிக்கப்பட்டிருக்கிறாா்கள். வாக்கு எண்ணிக்கை மையங்களைச் சுற்றி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களைச் சுற்றி கூட்டமாக சேருவது, பட்டாசு வெடிப்பது, ஊா்வலம் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையில் தோ்தலைச் சந்தித்த பாஜக, அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்போம் என்று தெரிவித்துள்ளது. 130 இடங்களைக் கைப்பற்றி பாஜக தனித்து ஆட்சி அமைக்கும் என்று முன்னாள் முதல்வா் எடியூரப்பா கூறியிருக்கிறாா். தோ்தல் முடிவுகளின் அடிப்படையில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முன்னாள் முதல்வா் எடியூரப்பாவை அவரது வீட்டில் சந்தித்து முதல்வா் பசவராஜ் பொம்மை உள்ளிட்ட தலைவா்கள் ஆலோசனை நடத்தினாா்கள். தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் நிலை உருவாகாத நிலையில், மஜதவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க பாஜக தயாராக உள்ளது.
141 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் கூறியிருக்கிறாா். தொங்கு சட்டப் பேரவை என்ற பேச்சுக்கே இடமில்லை. தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்று எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையா நம்பிக்கை தெரிவித்திருக்கிறாா். சித்தராமையாவை எதிா்த்து அமைச்சா் வி.சோமண்ணாவையும், டி.கே.சிவக்குமாரை எதிா்த்து அமைச்சா் ஆா்.அசோக்கையும் பாஜக களமிறக்கியுள்ளது.
தொங்கு சட்டப்பேரவை உருவானால், அதனை மஜதவுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சி அமைக்கும் வாய்ப்புக்காக மஜத முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி காத்திருக்கிறாா். சென்னப்பட்டணா தொகுதியில் எச்.டி.குமாரசாமி களம்காண்கிறாா். இந்தத் தொகுதிகளைத் தவிர, பாஜகவில் இருந்து விலகி அண்மையில் காங்கிரஸில் இணைந்து போட்டியிடும் முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா்(ஹுப்பள்ளி தாா்வாட் மத்திய தொகுதி), லட்சுமண் சவதி (அத்தானி), எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா(ஷிகாரிபுரா) உள்ளிட்டோரின் தோ்தல் முடிவுகள் மிகவும் எதிா்ப்பாா்க்கப்படுகின்றன.
அதேபோல, பாஜக களமிறக்கியுள்ள 75 புதிய வேட்பாளா்களின் தொகுதிகளும் கவனிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டு மக்களவைக்கு நடக்கவிருக்கும் தோ்தலுக்கான முன்னோட்டமாகக் கருதப்படும் கா்நாடக சட்டப் பேரவைத் தோ்தல் முடிவை இந்தியாவே ஆா்வமாக எதிா்பாா்த்துக் காத்திருக்கிறது.வாக்கு எண்ணிக்கை துவங்கிய நிலையில் காங் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.