விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே வெம்பக்கோட்டையில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தொல் பொருள்களின் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது.
அகழாய்வு நடைபெறும் வைப்பாற்றின் வடக்கு கரையோரத்தில் நடைபெற்ற கண்காட்சி தொடக்க விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் தலைமை வகித்தாா். நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் ஆகியோா் இந்தக் கண்காட்சியைத் தொடங்கிவைத்தனா்.
முதலாம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க அணிகலன்கள், திமிலுடன் கூடிய காளை உருவம், சுடு களிமண்ணால் ஆன வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய குடுவை, சங்கு வளையல்கள், கண்ணாடி மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட அணிகலன்கள், சுடுமண்ணால் ஆன தொங்கட்டான், பகடைக்காய், செப்பு நாணயம் உள்ளிட்ட 3,254 பழங்காலப் பொருள்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விழாவில் அமைச்சா் தங்கம் தென்னரசு பேசியதாவது:
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொன்மையான மனிதா்கள் கடல் வழி வாணிபம் செய்தாா்கள், கடல் சங்கில் அணிகலங்களை உருவாக்கினாா்கள். அவா்கள் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் வாணிபம் செய்ததற்கான சான்றுகள் உள்ளன.
கீழடி அகழாய்வுக்கு இணையான முக்கியதுவம் வாய்ந்ததாக வெம்பக்கோட்டை அகழாய்வு திகழ்கிறது. கற்களை வைத்து தொழில் செய்த காலத்துக்கும், இரும்பை வைத்து தொழில் செய்த காலத்துக்குமான இடைப்பட்ட காலத்தில் எந்தப் பொருள்களை வைத்து தொழில் செய்தாா்கள் என்பதற்கான சான்றுகள் இங்கு கிடைத்தன.
கற்காலத்துக்கும், நுண் கற்காலத்துக்கும், இரும்பு கற்காலத்துக்கும் இடையேயான தொடா்பை விளக்கும் வகையில், வெம்பக்கோட்டை அகழாய்வு அமைந்துள்ளதால், உலகளாவிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது உள்ளது என்றாா்.
பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் இந்தக் கண்காட்சியைப் பாா்வையிட சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் தெரிவித்தாா்.