பரமத்திவேலூர் அருகே வடமாநில தொழிலாளர்கள் குடிசைக்கு பெட்ரோல் குண்டு வீச்சால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குடிசையில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். குடத்தில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை கொண்டு வந்து குடிசையில் ஊற்றி தீயை அணைத்து இளைஞர்களை காப்பாற்றினார்கள்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டைகள் நிறைய உள்ளன.
இங்கு வட மாநிலங்களை சேர்ந்த ஏழை எளிய தொழிலாளர் தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர். இதில் ஜேடர்பாளையம் சரளைக்காடு பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் என்கிற முத்துசாமி என்பவரது ஆலைக் கொட்டகையில் வட மாநில இளைஞர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் அங்கு குடிசைகள் அமைத்து, அதில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இந்த குடிசையில் வேலை முடிந்து வட மாநில தொழிலாளர்கள் உறங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர்கள் குடிசையின் பின்புறமாக வந்து குடிசையின் ஓரத்தில் தடுப்பாக வைத்திருந்த அட்டையை உடைத்து அறைக்குள் புகுந்தனர். அறையில் தூங்கிக் கொண்டிருந்த 4 தொழிலாளர்கள் மீது பெட்ரோலை வீசி ஊற்றி தீ வைத்தனர். இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் என்கிற ரோகி, சுகிலாம், ஸ்வந்த், கோகுல் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
தீ உடல் முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்ததால் அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அபாய குரல் எழுப்பினார்கள். இதனிடையே மர்ம நபர்கள், குடிசையில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். இதனால் குடிசை முழுவதும் தீ கொளுந்து விட்டு எரிந்தது. இந்த சத்தத்தை கேட்டதும், மற்ற குடிசையில் தங்கியிருந்த வட மாநில தொழிலாளர்கள் அலறி அடித்துகொண்டு வெளியே ஓடி வந்தார்கள். அவர்கள், தீயில் சிக்கிய இளைஞர்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை கையாண்டனர்.
குடத்தில் பிடித்து வைத்திருந்த தண்ணீரை கொண்டு வந்து குடிசையில் ஊற்றி தீயை அணைத்து இளைஞர்களை காப்பாற்றினார்கள். இதில் ராகேஷ் என்கிற ரோகி, சுகிலாம் ஆகியோருக்கு உயிருக்கு போராடியபடி துடி துடித்துக்கொண்டிருந்தனர். ஸ்வந்த், கோகுல் ஆகிய இருவரும் உடல் முழுவதும் பலத்த தீக்காயம் அடைந்திருந்தனர். அவர்கள் கதறி அழுது கொண்டே இருந்தனர்.
ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரும் கொண்டு செல்லப்பட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வட மாநிலத்தவர் மீது தீ வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட கலெக்டர் ஷ்ரேயா சிங், நீதிபதி, நித்யா, கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிகுமார், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், பரமத்தி வேலூர் டிஎஸ்பி கலையரசன் மற்றும் வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
மேலும் அருகில் குடியிருந்த மற்ற வட மாநில தொழிலாளர்கள், ஆலை உரிமையாளர் உள்ளிட்டோரிடம் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்ட தடய அறிவியல் துறை மாவட்ட உதவி இயக்குனர் வடிவேல் தலைமையிலான குழுவினர் தீ வைத்த இடங்களில் இருந்த தீக்கிரையான பொருட்களை சேகரித்து அவற்றை சுமார் 10-க்கும் மேற்பட்ட டப்பாக்களில் அடைத்து தடய அறிவியல் ஆய்வுக்காக கொண்டு சென்றனர். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ஏவி விடப்படது.
அது குடிசை மற்றும் அந்த பகுதியில் உள்ள வயல் வழியாக ஓடிச் சென்று நின்று கொண்டது. கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர் சம்பவ இடத்தில் ஆய்வுகளை முடித்துக் கொண்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் வட மாநில தொழிலாளர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்.
இதேபோல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களிடம் கரூர் விரைவு நீதிமன்ற நீதிபதி வாக்கு மூலம் பெற்றார். மர்ம நபர்களை பிடிக்க 4-க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார், அந்த பகுதியில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் மர்ம நபர்ளை வலைவீசி தேடிவருகின்றனர். இப்பகுதியில் நடந்து வரும் தொடர் அசம்பாவி தங்களால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து ரோந்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.