
கள்ளச்சாராயம் குடித்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் எதிரொலியால், தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
குறிப்பாக, வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே, கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 22 கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 88 கள்ளச் சாராய வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து 226 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை வழக்குகளில் 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 109 லிட்டர் சாராயம், 428 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில் கடலூரில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியை சேர்ந்தவர் அமரன் (25), கள்ளச்சாராய வியாபாரி. இவர் புதுவை மாநிலத்திலிருந்து சாராயத்தை கடத்தி வந்து விற்றுள்ளார்.
இவர் விற்ற கள்ளச்சாராயத்தை எக்கியர்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த பலர் நேற்று முன்தினம் மாலை வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் சங்கர் (55), தரணிவேல் (50), ராஜமூர்த்தி (60), சுரேஷ் (60), மண்ணாங்கட்டி (47), சந்திரன் (61), மற்றொரு மண்ணாங்கட்டி (55) ஆகியோர் தங்களது வீடுகளுக்கு சென்று அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
அவர்களை உறவினர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சங்கர், சுரேஷ் ஆகியோர் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். தொடர்ந்து தரணிவேல், ராஜமூர்த்தி, மண்ணாங்கட்டி ஆகியோர் நேற்று இறந்தனர். ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அதே பகுதியை சேர்ந்த 13 பேர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் மலர்விழி, விஜயன், சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அதே போல், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத்குமார் என்பவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.
இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் 22 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. கடலூர் எஸ்.பி ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று இரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். மாவட்டம் முழுவதும் சாராயம் விற்றதாக 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டோரிடம் இருந்து 226 லிட்டர் சாராயம் மற்றும் 517 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.மதுக்கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை 7418846100 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு!!
கள்ளச்சாராயத்தை ஒழிக்க தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தேடுதல் வேட்டையில் ஈடுபட போலீசாருக்கு டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். வனப்பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.