திருபுவனம் அருகே இயங்கி வரும் அரசு மதுபான கிடங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 லாரிகளில் 200 மதுபான பாட்டில்கள் கொள்ள போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம், திருபுவனத்தில் அரசு மதுபான கிடங்கு இயங்கி வருகிறது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து மதுபானங்கள் லாரிகள் மூலம் இங்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து அரசு டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும், குடோனில் மதுபானங்கள் அதிகமான இருப்பு இருக்கும் பட்சத்தில், அங்கு இடம் இல்லாததால் லாரிகளில் கொண்டு வரும் மதுபானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் குடோனில் இடம் காலியான பிறகு அங்கு மதுபான பெட்டிகளை பாதுகாப்பாக இறக்கி வைப்பது வழக்கம். இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து 2 லாரிகளில் மதுபானம் ஏற்றி வந்த லாரிகள், கடந்த 3 நாட்களாக அந்த குடோன் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே, நேற்று இரவு லாரி ஓட்டுநர்கள் பின்புறம் சென்று பார்த்தபோது, மதுபாட்டில்கள் உள்ள அட்டை பெட்டிகள் கிழிக்கப்பட்டு சுமார் 200 பாட்டில்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து லாரி ஓட்டுநர்களான, பாலகுமார் (55) மற்றும் இம்மானுவேல் (45), ஆகியோர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.