
தமிழகத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இன்று காலை சரவணன்(58), ராஜவேல்(49) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்தவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலுமாக தடை செய்யக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.
தற்போதைய நிலவரப்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரூ.50,000 நிவாரணமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
முன்னதாக, மரக்காணம், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கள்ளச்சாராயம் குடித்துப் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தார். கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.