
சித்தராமையாவையும், சிவக்குமாரையும் சமரசம் செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வரும் நிலையில் கர்நாடக காங். எம்எல்ஏக்கள் கார்கேவுடன் சந்தித்து பேசிவருவதாக தெரியவந்துள்ளது.
மல்லிகார்ஜுன கார்கே
தில்லியில் கர்நாடக எம்எல்ஏக்கள் சந்தித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தி வருகிறார்.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் காய்களை நகா்த்தி வருகிறாா்கள்.
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இருவரும் தில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து தனித்தனியே நேற்று இரவு ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, இருவரும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை இன்று காலை தனித்தனியே சந்திக்கவுள்ளனர்.
இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கார்கேவுடன் அவரது இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சித்தராமையாவையும், சிவக்குமாரையும் சமரசம் செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறி வருவதால், அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.