ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதிமுக சட்டவிதிகளை அங்கீகரித்து இணையத்தில் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
பொதுச்செயலாளர் தேர்வு மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஜூலை 11ல் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அடுத்த 3 மாத காலத்திற்குள்ளாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல், தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையர்களாக பொள்ளாச்சி ஜெயராமன், நத்தம் விஸ்வநாதன் நியமனம் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ், வைத்திலிங்கம் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதோடு பல்வேறு சட்ட விதிகளும் திருத்தும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு போட்டியிட விரும்புவோர் குறைந்தது 10 ஆண்டுகள் தொடர்ந்து கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமை கழக பொறுப்புகளில் தொடர்ந்து 5 ஆண்டுகள் இருக்க வேண்டும். கட்சி கழக அமைப்பு ரீதியாக உள்ள பொறுப்புகளில் 10 மாவட்டச் செயலாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோரை முன்மொழிய வேண்டும்.
அதேபோல கழக அமைப்பு ரீதியாக உள்ள பொறுப்புகளில் 10 மாவட்டச் செயலாளர்கள் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட விரும்புவோரை வழிமொழிய வேண்டும் என்று பல்வேறு சட்டதிருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
தொடர்ச்சியாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு காலகட்டங்களில் விசாரணை நடத்தப்பட்டு 1 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது. அதிமுக பொதுக்குழுவில் கட்சியின் விதிகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டு தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. திருத்தப்பட்ட அதிமுக சட்ட விதிகளுக்கு அங்கீகாரம் அளித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணையத்தில் பதிவேற்றம் செய்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.