தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் கூலி தொழிலாளர்களை ஏற்றி சென்ற ஆட்டோ லாரியில் மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானா மாநில நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள நர்சபுரம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலார்கள் ஆந்திராவில் கூலி பணிக்காக செல்வது வழக்கம். அதன் படி ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் புளிப்பாடு கிராமத்தில் கூலி பணி செய்வதற்காக நர்சபுரம் கிராமத்தை சேர்ந்த 23 பேர் ஒரே ஆட்டோவில் பயணம் செய்துள்ளனர்.
இந்த ஆட்டோவானது பல்நாடு மாவட்டத்தில் சென்று கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த லாரி அதிவேகமாக வந்து ஆட்டோ மீது மோதியது. இதில் கூலி தொழிலாளிகளான பத்மா, சக்ரி, சோனி, மஞ்சுளா, கவிதா ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பல்நாடு போலீசார் மீட்பு பணியில் ஈடுப்பட்டு காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்திற்கான முக்கிய காரணம் லாரி டிரைவர் அதிகாலை நேரத்தில் அதிவேகமாக வந்ததோடு, தூக்கத்தில் வந்து ஆட்டோ மீது மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் கூலி தொழிலாளர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.