கர்நாடக மக்களின் முன்னேற்றத்திற்கும் நலனுக்கும் சமூக நீதியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் உறுதிபூண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
கா்நாடக பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. இதையடுத்து, மாநில முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமாா் இடையே போட்டி நிலவி வந்தது. இதுகுறித்து காங்கிரஸ் தலைமை, கடந்த ஓரிரு தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது.
அந்தவகையில் கா்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் வருகிற மே 20 ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.
முன்னதாக இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்திற்கு சித்தராமையாவும் டி.கே.சிவகுமாரும் சென்றுள்ளனர். இருவரும் ஒரே காரில் சென்றுள்ளது சுமூக முடிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. விரைவில் கர்நாடக முதல்வர் பதவி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘கர்நாடக மக்களின் நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் சமூக நீதியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் உறுதி எடுத்துள்ளது. 6.5 கோடி கன்னடர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட 5 உத்தரவாதங்களை நாங்கள் நிறைவேற்றுவோம்’ என்று பதிவிட்டு சித்தராமையா, டி.கே.சிவகுமாருடன் கைகோர்த்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.