ரூ. 2,000 நோட்டுகள் செப்டம்பர்க்கு பிறகு செல்லாது..புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மே மாதம் 23ஆம் தேதியில் இருந்து ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் எனவும் வரும் 2023 செப்டம்பர் 30ஆம் தேதி வரை ரூ 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
தினமும் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றலாம் என்றும் வங்கிகளில் செலுத்தப்படும் ரூ2,000 நோட்டுகளை வங்கிகள் புழக்கத்தில் விடக்கூடாது என்றும் கூறியுள்ளது.
மேலும் 89% ரூ.2,000 நோட்டுகள் மார்ச் 2017க்கு முன் புழக்கத்தில் விடப்பட்டதாகவும், 2018-19ஆம் ஆண்டு முதல் ரூ.2,000 நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
கிளீன் நோட் பாலிசி அடிப்படையில் ரூ.2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும் 2013-14 காலகட்டத்திலும் இதேபோல ரூபாய்த் தாள்கள் திரும்பப் பெறப்பட்டன எனவும் ரிசர்வ் வங்கி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2018 மார்ச் நிலவரப்படி 6.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. பின்னர் படிப்படியாக குறைக்கப்பட்டு 2023 மார்ச் 31 நிலவரப்படி 3.62 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.
இந்த நிலையில் தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2,000 நோட்டுகள் படிப்படியாக திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஒரே இரவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கூறி, புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை பாஜக ஆளும் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
2,000 ரூபாய் நோட்டு கறுப்புப் பணம் அதிகரிக்க வழிவகுக்கும் என அப்போதே விமர்சனம் எழுந்தது நினைவுகூரத்தக்கது.