தலை சுற்றவைக்கும் போக்குவரத்து நெரிசல், போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், மகிழ்ச்சியைத் தேடி மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மனஉளைச்சலோடு ஊர் திரும்பும் நிலை உள்ளது.
சர்வதேச சுற்றுலா நகரமான கொடைக்கானலுக்கு தற்போது தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வாகனங்களில் படையெடுத்து வருகின்றனர்.
பிரையன்ட் பூங்கா, ரோஜா கார்டன், பசுமை பள்ளத்தாக்கு, குணா குகை, பைன் பாரஸ்ட், மோயர் சதுக்கம், தூண் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் திரும்பிய பக்கமெல்லாம் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
ஆனால், போக்குவரத்து நெரிசல், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதிய அளவில் இல்லாதது போன்றவற்றால் சுற்றுலா பயணிகள் நிம்மதியை இழந்து திரும்பிச் செல்கின்றனர்.
தங்கும் விடுதிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வாடகையும், உணவு பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளன. வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை.
சுற்றுலா இடங்களில் குடிக்க தண்ணீர் இல்லாமல், கடைகளில் விலை கொடுத்தே வாங்க வேண்டிய நிலை உள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் கழிப்பறைகள் (இ-டாய்லெட்) அமைக்கப்பட்டிருந்தாலும், அவை சுகாதாரமின்றி துர்நாற்றம் வீசு கிறது. கொடைக்கானல் ஏரியைச் சுற்றியுள்ள சாலை, பெருமாள் மலையிலிருந்து கொடைக்கானல் வரும் சாலை என பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன.
விடுமுறை நாட்களில் கொடைக் கானல் நகருக்குள் நுழையும் முன்பு மலைச் சாலையிலேயே வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து செல்லும் நிலை உள்ளது.
பார்க்கிங் வசதி இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதும் போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தற்போது வரை கூடுதல் போலீஸார் நியமிக்கப்படவில்லை. உடனடியாக கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும்.
கொடைக்கானலில் மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரை மலர்க் கண்காட்சி மற்றும் கோடை விழா நடைபெற உள்ளது. அப்போது சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும். எனவே, அதற்குள்ளாக போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.