தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த எக்கியார்குப்பம், செங்கல்பட்டு அருகே உள்ள சித்தாமூர் ஆகிய 2 இடங்களிலும் கள்ளச்சாராயம் குடித்த 22 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து அ.தி.மு.க., பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து உள்ளன. அரசின் அலட்சிய போக்கு காரணமாகவே கள்ளச்சாராய மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று இந்த 2 கட்சிகளும் குற்றம்சாட்டியுள்ளன.
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கவர்னரை சந்தித்து மனு அளிக்க இருப்பதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதன்படி பாரதிய ஜனதா கட்சியினர் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர். பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், தமிழக சட்டமன்ற பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் அடங்கிய குழுவினர் கவர்னரிடம் மனு அளித்தனர். அதில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய மரண விவகாரத்தில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
கவர்னருடனான இந்த சந்திப்பின்போது டாஸ்மாக் மதுவுக்கு அடிமையானவர்கள்தான் விலை குறைவு என்பதால் கள்ளச்சாராயத்துக்கும் அடிமையாகி உள்ளனர். எனவே கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் விஷயத்தில் கவர்னர் நேரடியாக தலையிட வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் நேரில் வலியுறுத்தினர். கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்தும் விஷயத்தில் கவர்னர் தலையிட்டு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புக்கு பின்னர் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கவர்னர் மாளிகை வெளியே கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக கவர்னரை சந்தித்தது பற்றி விளக்கம் அளித்தனர். இதையொட்டி கவர்னர் மாளிகை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.