முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 32-வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கட்ந்த 1991ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி உயிரிழந்தார்.
இந்த நிலையில் இன்று அவரது 32-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள வீர் பூமியில் இருக்கும் அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி, தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் நேரில் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தனது தந்தை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, ‘அப்பா, நீங்கள் என்னோடும், என்னுடைய நினைவுகளிலும் என்றென்றும் எனக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள்’ என்று கூறியுள்ளார்,
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “ராஜீவ் காந்தி இந்தியாவின் மிகச்சிறந்த மகன். வாக்களிக்கும் வயதைக் குறைத்தது, பஞ்சாயத்து ராஜ், தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை வலுப்படுத்தியது மற்றும் நீடித்த அமைதி ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் அவர் இந்தியாவை மாற்றினார். அவரது தியாக நாளில் எங்களின் சிரம் தாழ்ந்த அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் ராஜீவ் காந்தி நினைவு தினத்தை முன்னிட்டு தங்கள் சமூக வலைதள பக்கங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.