உலக அளவில் பொருளாதாரத்தில் ஐந்தாவது நாடாக இந்தியா உயர்ந்து இருக்கிறது. மோடியின் தன்னலமற்ற சேவையை உலகமே பார்த்து வியக்கிறது. திமுக.வின் இரண்டரை ஆண்டு ஆட்சி தமிழகத்திற்கு ஏழரை என்ற கதையாகத்தான் உள்ளது என குஷ்பு விமர்சனம் செய்து கூறியுள்ளார்.
பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:- தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகளாக நடக்கும் தி.மு.க. ஆட்சியில் சாதனை என்பதை விட மக்களுக்கு வேதனை தான் அதிகம். தாராளமாக புழங்கும் சாராயம் எங்கும் கொலைகள், கொள்ளைகள். எந்த கட்டுப்பாடும் இல்லாமல் பார்களில் மது விற்கப்படுகிறது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அதை போலீசார் கண்டு கொள்வது கூட இல்லை.
பா.ஜ.க.வை விமர்சிக்க தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியாவில் எந்த கட்சிக்கும் தகுதி இல்லை. உலக அளவில் பொருளாதாரத்தில் ஐந்தாவது நாடாக இந்தியா உயர்ந்து இருக்கிறது. விரைவில் நாலாவது இடத்திற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது. மோடியின் தன்னலமற்ற சேவையை உலகமே பார்த்து வியக்கிறது. அவர் ஒரு தர்மயோகி என்பதை ஒவ்வொரு செயலிலும் காட்டி வருகிறார்.
அதனால் தான் வெளிநாட்டு பிரதமர் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசி பெரும் அளவுக்கு எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த காரணத்திற்காக இந்தியாவிலும் ஆட்சியைப் பிடிக்கப் போகிறோம் என்பது காங்கிரஸ் காணும் ஆட்சிக்கனவு. கனவு காண எல்லோருக்கும் உரிமை உள்ளது. மன்னர் உடையை அணிந்து நானும் மன்னர் தான் என்று சொல்லிக் கொள்ளலாம்.
ஆனால் மன்னர் ஆக வேண்டுமே. தனது சொந்த தொகுதியை தக்க வைத்துக் கொள்ளவே முடியாத ராகுல் காந்தி எப்படி நாட்டை பிடிக்க முடியும். தமிழகத்தில் தி.மு.க.வின் இரண்டரை ஆண்டு கால ஆட்சி தமிழர்களுக்கு ஏழரை என்ற கதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. விரைவில் மக்கள் இந்த ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.