அரசுப் பேருந்துகளில் ரூ. 2,000 நோட்டுகள் வாங்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ரூ. 2,000 நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசா்வ் வங்கி கடந்த மே 19-ஆம் தேதி அறிவித்தது. ரூ.2,000 நோட்டுகள் வைத்திருப்போா், செப்.30-ஆம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, தமிழகத்தில் அரசுப் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று நடத்துநா்களுக்கு அனைத்து அரசுப் போக்குவரத்து கழகங்களும் அறிவுறுத்தியுள்ளதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் ரூ.2,000 நோட்டுகளை பெறுவதற்கு எந்த தடையும் இல்லை என்றும், பயணிகளிடம் ரூ.2,000 நோட்டுகள் வாங்கப்படும் என்றும் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், வெளிநபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அளிக்கும் ரூ.2,000 நோட்டுகள் வாங்கக்கூடாது என்று நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.