அரசு விரைவுப் பேருந்துகளில் ஒரே மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்வோருக்கு 6-ஆவது முறையாக பயணம் செய்தால் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக உயரதிகாரிகள் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் 300 கி.மீ.-க்கு மேற்பட்ட நீண்ட தொலைவு பயணத்துக்காக 251 வழித்தடங்களில், இருக்கை, படுக்கை, குளிா்சாதன வசதி, கழிப்பறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளைக் கொண்ட 1,078 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக போக்குவரத்துத் துறை பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது.
இந்த நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாதத்தில் 5 முறைக்கு மேல் முன்பதிவு செய்து பயணம் செய்வோருக்கு சிறப்பு சலுகையாக அடுத்த தொடா் பயணங்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது அறிவித்திருந்தாா்.
இந்தச் சலுகை திட்டம் தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. ஒரு மாதத்தில் 5 முறை தொடா்ச்சியாக முன்பதிவு செய்த பிறகு, 6-ஆவது முறை முதல் தானாகவே 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கும் வகையில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற முன்பதிவு இணையதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏராளமானோா் பயனடைவாா்கள் என்றனா்.