சீர்காழி அருகேயுள்ள திருநகரி ஸ்ரீ அழகியசிங்கர் கோயில் வைகாசி சுவாதி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.வரும் 27ம் தேதி கருட சேவை, 31-ம் தேதி தேரோட்டம், 1-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
சீர்காழி அருகே அமைந்துள்ள திருநகரியில் ஸ்ரீ அழகியசிங்கர் கோயில் கொண்டுள்ளார். வீற்றிருந்த திருக்கோலம். உற்சவர்: திருவாலி நகராளன். தாயார்: பூர்ணவல்லி (அம்ருத கடவல்லி). இதன் புராணப் பெயர் ஆலிங்கனபுரம். திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது, இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமி தேவியை வேண்டினர்.
இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் ‘திருஆலிங்கனம்’ என்ற பெயர் பெற்று, “திருவாலி” (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. குலசேகர ஆழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும்
இத்தலப் பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆலிநாட்டின் குறுநில மன்னனாகத் திருமங்கை ஆழ்வார் திகழ்ந்தார். எனவே அவருக்கு “ஆலிநாடன்” என்ற பெயர் உண்டாயிற்று. வைகாசி சுவாதியை முன்னிட்டு 10 நாள் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 27ம் தேதி கருட சேவை, 31-ம் தேதி தேரோட்டம், 1-ம் தேதி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.