ராஜபாளையம் அருகே குடும்பப் பிரச்சனை காரணமாக இரு மகள்களுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானத்தைச் சேர்ந்தவர் முத்துக் குமார் (36). இவரது மனைவி ராமுத் தாய் (30). இவர்களுக்கு நிஷா (6), வர்ஷா (3) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். முத்துக் குமார் வெல்டிங் வேலை செய்து வருகிறார். முத்துக் குமார் குடித்து விட்டு அடிக்கடி ராமுத்தாயுடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். அப்போதெல்லாம் குடும்பப் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராமுத்தாய் தனது இரு குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இரவு நீண்ட நேரமாகியும் ராமத் தாய் குழந்தைகளுடன் வீட்டிற்கு வராததால் அவரை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடி உள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை தெற்கு தேவதானம் பகுதியில் உள்ள முத்து மாணிக்கம் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இரு உடல்கள் மிதப்பதை கண்ட விவசாயிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு துறையினர் உதவியுடன் ராமுத்தாய், வர்ஷா ஆகியோரின் உடல்களை மீட்டு வேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சிறுமி நிஷாவின் உடல் பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து இரு மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி குழந்தையின் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குடும்ப பிரச்சினை காரணமாக இரு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தேவதானம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.