ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருக்கோயில் தக்காரும்
தியாகராசர் பொறியியல் கல்லூரியின் இயக்குநரும். கலைத் தந்தை கருமுத்து தியாகராஜர் செட்டியாரின் அன்புமகனுமான கருமுத்து கண்ணன் இன்று 23.05.2023 இன்று காலை காலமானார். அவரது உடலுக்கு ஏராளமானோ மலர் மாலை சூட்டி மரியாதை செய்து வருகின்றனர்
அவரது இறுதிச் சடங்குகள் நாளை மதியம் 2 மணியளவில் கோச்சடையில் நடைபெறும் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு தமிழரும் பெருமை கொள்ள வேண்டிய பேராளுமைகள் வரிசையில் கருமுத்து கண்ணனும் ஒருவர் !
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் தக்கார், மீனாட்சி மில்ஸ் இயக்குநர் எனப் பன்முகத்தன்மை கொண்ட கருமுத்து கண்ணன் இயற்கை எய்தினார் எனும் செய்தி இன்று காலை வெளியானதும் பிரபலங்கள் பலரும் அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்தனர்
70 வயதான கருமுத்து கண்ணன், கருமுத்து தியாகராசர் என அழைக்கப்பட்ட கருமுத்து தியாகராஜ செட்டியாரின் மகன்.
சிவகங்கையில் பிறந்த கருமுத்து தியாகராசர் அவர்களின் குடும்பத்தினர் இலங்கையில் துணி வணிகம் செய்தவர்கள்.
1925 ம் ஆண்டில் தமிழ்நாட்டின் மதுரையில் மீனாட்சி நூற்பாலையைத் தொடங்கியவர் தியாகராசர். மேலும் பல ஊர்களில் நூற்பாலைகளை அமைத்தவர்.
தொல்காப்பியத்தின் ஆங்கில நூற்பதிப்பு உள்ளிட்ட பல தமிழின் தலைசிறந்த நூல்கள் வெளிவர நிதி உதவி செய்தவர் தியாகராசர் .
கல்வித் தந்தை என அழைக்கப்பட்ட இவர் தொடங்கியதுதான் மதுரை தியாகராஜர் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள், கல்விச் சாலைகள்.
ஆங்கிலத்தில் நல்ல புலமை என்ற போதும் ஆங்கிலம் கலக்காத தனித்தமிழில் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர் தியாகராசர்.
தன் மனைவிக்கு கல்வி கற்க ஊக்கப்படுத்தி அவரை ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் அளவு உயர்த்தியவர்.
14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை நிறுவியவர். கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்டவர் கருமுத்து தியாகராஜ செட்டியார்.
இலங்கையில் தமிழர்கள் என்று அடையாளம் காண உடலில் சூடு போட்டுத் தளும்பு அடையாளம் ஏற்படுத்தும் கொடிய முறை இருந்தது. அதை நிறுத்தச் செய்தவர் தியாகராசர்.
தமிழ்நாடு எனும் பெயரில் பல ஆண்டுகள் நாளிதழ் நடத்தியவர் தியாகராசர். அவரது திருமகனாரான கருமுத்து கண்ணன் தன் தந்தையார் விட்டு சென்ற பணிகளை குறைவின்றி கவனித்து வந்தார் மதுரை கோயில் தக்காராக பொறுப்புணர்வுடன் சிறப்பாக நம் ஆளுமையை வெளிப்படுத்தி வந்தார். வறுமை நிலையில் இருக்கும் பலருக்கு நிதி உதவிகள் தாராளமாக செய்தவர். சமூக முன்னேற்றத்திற்காக பல வகைகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் கருமுத்து கண்ணன். அன்னாரது மறைவுக்கு நம் தளத்தின் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.