
ராஜபாளையம் தாலுகாவில் டாஸ்மாக் கடை அருகே அனுமதி இன்றி செயல்பட்ட 11 பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ராஜபாளையம் காவல் உட்கோட்டத்தில் ராஜபாளையம் – தென்காசி சாலையில் 3, ராஜபாளையம் நகரில் 9, செட்டியார்பட்டி கிராமத்தில் 3, தெற்கு வெங்காநல்லூர் 2, சேத்தூர் உட்பட 25 இடங்களில் உள்ள டாஸ்மாக் கடை அருகே அனுமதியின்றி செயல்படும் பார்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு டி.எஸ்.பிக்கு காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் உத்தரவிட்டார்.
இதையடுத்து டி.எஸ்.பி பிரீத்தி, வட்டாட்சியர் ராமச்சந்திரன் தலைமையில் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், வி.ஏ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் போலீஸார் அனுமதி இன்றி செயல்படும் பார்களில் சோதனை நடத்தினர். அப்போது பெரும்பாலான பார்கள் மூடப்பட்டிருந்தது. 3 பார்கள் டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்பட்டு வந்தது. பூட்டி இருந்த 11 பார்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் டாஸ்மாக் கடை உள்ள கட்டிடத்திலேயே செயல்படும் 3 பார்களை உடனடியாக காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நாளையும் ஆய்வு செய்து ராஜபாளையம் தாலுகாவில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து பார்களுக்கும் சீல் வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.