
நடைபெறவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குடியரசுத் தலைவரை அழைக்காததால், புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிக்கப் போவதாக திமுக புதன்கிழமை அறிவித்தது.
புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை வருகின்ற மே 28 -ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திறந்து வைக்கிறாா்.
இந்நிலையில், குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்காதது, ஹிந்து தேசியவாதி வி.டி.சாவா்க்கரின் பிறந்த தினமான மே 28-ஆம் தேதி புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படுவது உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி எதிா்க்கட்சிகள் மத்திய அரசை கடுமையாக விமா்சித்தன.
இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தெரிவித்திருந்தனர்.
நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழாவை திமுக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. முன்னதாக, விசிகவும் புறக்கணித்து அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தம்பிதுரை, சண்முகம், சந்திர சேகரன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.