பழநி கோயில் உண்டியலில் தவறுதலாக தங்க செயினை போட்ட கேரளாவை சேர்ந்த பெண்ணுக்கு புதிய செயினை கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் வழங்கினார்.
கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், கார்திகாபள்ளியைச் சேர்ந்தவர் சசிதரன் பிள்ளை. இவரது மகள் சங்கீதா (28) கடந்த ஆண்டு செப். 19ம் தேதி பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அங்கு கழுத்தில் அணிந்திருந்த துளசி மாலையை கழட்டி உண்டியலில் போட முற்பட்டுள்ளார்.
அப்போது அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்க செயினையும் சேர்த்து, தவறுதலாக உண்டியலில் செலுத்தி விட்டார். தங்கள் குடும்பம் ஏழ்மை நிலையில் உள்ளதென்றும், அதனை கருத்தில் கொண்டு உண்டியலில் செலுத்தப்பட்ட தங்க செயினை திரும்ப வழங்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தார்.
இந்த நிகழ்வுகளை கோயில் அதிகாரிகள் சிசிடிவி கேமரா காட்சிகளின் மூலம் உறுதி செய்தனர். ஆனால், சட்டத்தின்படி உண்டியலில் விழுந்த பொருட்கள் திரும்ப வழங்க வழியில்லை.
இந்நிலையில் பழநி கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சந்திரமோகன், ரூ.1.09 லட்சம் மதிப்புள்ள 17.46 கிராம் எடையுள்ள தங்கச் செயினை அப்பெண்ணிற்கு வழங்கினார். நேற்று சங்கீதா தனது குடும்பத்தினருடன் வந்து, கண்ணீர் மல்க தங்கச் சங்கிலியை பெற்றுச் சென்றார்.