
நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி, நினைவுப் பரிசு வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கெளரவித்தார்.
நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவில், கட்டுமானப் பணியில் ஈடுபட்டவர்களும் கலந்துகொண்டனர். செங்கோல் நிறுவிய பிறகு அனைத்து மத வழிபாடு நடைபெற்றதைத் தொடர்ந்து, கட்டுமானத் தொழிலாளர்களை பிரதமர் மோடி கெளரவித்தார்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா சா்வ மத பிராா்த்தனைகளுடன் ஞாயிற்றுக்கிழமை இன்று (மே 28) காலை தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் அதிகாரபூா்வமான நிகழ்ச்சி காலை 12 மணிக்கு நடைபெறுகிறது. ஆனால் அதற்கு முன்னதாக பாரம்பரிய சடங்குகள் காலையிலேயே தொடங்கியது.

வேத மந்திரங்கள் முழங்க தமிழக ஆதீனங்கள், ஓதுவார்கள் நடத்தும் சிறப்பு வழிபாட்டில் பிரதமர் கலந்துகொண்டு, வழிபாட்டில் ஈடுபட்டார். அவருடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் கலந்துகொண்டார்.
நடாளுமன்ற கட்டட திறப்பு விழாவையொட்டி சிறப்பு பூஜைக்குப் பிறகு ஆதீனங்களிடமிருந்து செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார்.
பூஜை நிகழ்ச்சிக்கு பிறகு செங்கோல் முன்பு மண்டியிட்டு பிரதமர் வணங்கினார். பின்னர் செங்கோலை ஏந்தியபடி ஆதீனங்களிடம் தனித்தனியாக ஆசிபெற்றார்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் மக்களவை தலைவர் இருக்கை அருகே செங்கோலை பிரதமர் நரேந்திர மோடி நிறுவினார். செங்கோலை செங்குத்தாக நிலைநிறுத்தி, குத்துவிளக்கு ஏற்றிவைத்தார்.
அப்போது வந்தே மாதரம் பாடல் நாதஸ்வரத்தில் இசைக்கப்பட்டது. அப்போது
புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கான கல்வெட்டை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். உடன் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இருந்தார்.
நாடாளுமன்ற கட்டடப் பணியில் ஈடுபட்ட அனைத்து கட்டுமானத் தொழிலாளர்களுக்கும் பொன்னாடைப் போர்த்தி பிரதமர் நரேந்திர மோடி கெளரவித்தார்.
பின்னா் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மக்களவையில் அதிகாரபூா்வமான துவக்கநாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி சரியாக பிற்பகல் 12 மணிக்கு தேசியக் கீதத்துடன் தொடங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் மாநிலங்களவைத் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண சிங் உரையாற்றுகிறாா். குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கா் ஆகியோா் புதிய நாடாளுமன்றத் தொடக்க விழாவிற்கு அளித்த வாழ்த்து செய்திகளும் படிக்கப்படுகிறது.
பின்னா் புதிய நாடாளுமன்றத்தில் இரு குறுகிய நேர காணொலியும் திரையிடப்பட இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்கட்சிகள் குடியரசுத் தலைவரை அழைக்கவில்லை எனக் கூறி இந்த திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஆனால், மாநிலங்களவை எதிா்க்கட்சி தலைவா் அவையில் பங்கேற்றால் அவா் பேசவும் அழைக்கப்படுவாா் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் 75- ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டும் சுமாா் 35 கிராம் எடை கொண்ட ரூ.75 நாணயத்தையும் தபால் தலையையும் பிரதமா் வெளியிடுகிறாா். சுமாா் 1 மணி அளவில் புதிய நாடாளுமன்றக் கட்ட திறப்பு விழா குறித்த சிறப்பு உரையை பிரதமா் ஆற்றுகிறாா்.
கடந்த சில நாட்களாகவே பிரதமா் புதிய நாடாளுமன்ற கட்டடம் ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் எனக் கூறி புதிய கட்டட வளாகத்தின் காணொலியையும் பகிா்ந்துள்ளாா்.
பிரதமா் வெளியிடும் 2023-ஆம் ஆண்டின் புதிய ரூ. 75 நாணயத்தில் நாணயத்தின் ஒரு பக்கம் அசோக தூணின் சிங்க உருவமும் நடுவில் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் ’பாரத்’ என எழுதப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் செங்கோல், உத்தரபிரதேசம் மிா்சாபூா் தரைவிரிப்புகள், திரிபுரா மூங்கில் தரை ராஜஸ்தானில் இருந்து கல் வேலைப்பாடுகள், மகாராஷ்டிரம் மாநில புகழ் பெற்ற தேக்கு மரங்கள் என நாட்டின் பல்வேறு கலாசாரங்களை இந்த புதிய கட்டடம் பிரதிபலிக்கிறது.