
மணிப்பூரில் ஏற்பட்ட கலவரத்தில் சிக்கி போலீசார் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் பலத்த காயமுற்றனர்.
கடந்த மாதம் ஏற்பட்ட கலவரத்தில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டு வருகிறது.
முன்னதாக கலவரக்காரர்கள் உடன் நடைபெற்ற மோதலில் சுமார் 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என மணிப்பூர் மாநில முதலமைச்சர் பைரன் சிங் தெரிவித்தார். இது பற்றி மேலும் பேசிய அவர் கூறியதாவது, “பயங்கரவாதிகள் எம்-16 மற்றும் ஏகே-47 ரக அசால்ட் ரைஃபிள் மற்றும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளை பயன்படுத்தினர்.
அவர்கள் ஏராளமான கிராமங்களுக்குள் புகுந்து, வீடுகளுக்கு தீ வைத்தனர். ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் மூலம், அவர்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கை எடுக்க துவங்கி விட்டோம். கிட்டத்தட்ட 40 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டஎனர் என்று தகவல்கள் கிடைத்துள்ளன,” என்று தெரிவித்தார்.
கலவரம் ஏற்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா இன்று பயணம் செய்கிறார். அமைதியை நிலைநாட்ட சமூகங்கள் அமைதி காக்க வேண்டும் என்று அமித் ஷா வலியுறுத்தி உள்ளார். முன்னதாக ராணுவ தளபதி மனோஜ் பாண்டே மணிப்பூருக்கு விரைந்து, அங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலைமையை ஆய்வு செய்தார்.