ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்தோர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டும் என்றும், தமிழகத்தில் இன்று அரசு சார்பில் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.. அவர் வெளியிட்ட அறிக்கை:
ஒடிசா மாநிலத்தில் நேற்று ஏற்பட்ட இரயில் விபத்தில் நூற்றுக்கணக்கான மனித உயிர்களை இழந்திருக்கிறோம். மிகப் பெரிய துயர நிகழ்வாக நாட்டையே இது சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசின் சார்பில் இன்று துக்க நாளாக அனுசரிக்கப்படும்.
இன்று நடைபெறுவதாக இருந்த நிகழ்ச்சிகள் வேறொரு நாளுக்கு ஒத்திவைக்கப்படுகின்றன. விபத்து குறித்த தகவல்களைப் பெற 1070, 94458 69843, 94458 69848 (வாட்சாப்) ஆகிய உதவி எண்கள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. மாண்புமிகு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனடியாக ஒடிசா சென்று, அங்குள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் நிலையை அறிந்து, மீட்புப்பணிகளை ஒருங்கிணைத்து விரைவுபடுத்த உள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 இலட்சம் ரூபாயும், தீவிர காயமுற்றோருக்கு 1 இலட்சம் ரூபாயும் தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும்.. என்று தெரிவித்துள்ளார்.