திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருத்தலம் அரிகேசவநல்லூர். இங்கே கோயில் கொண்டிருக்கும் பெரியநாயகி அம்பாள் உடனுறை அரியநாதரை வணங்கிச் செல்பவர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெறுகின்றனர். இதனால் பக்தர்கள் அதிகம் வரும் கோயிலாக இது விளங்குகிறது.
இந்தக் கோயிலிலுள்ள திருக்குளம் அசுத்தமடைந்து துர்நாற்றம் வீசியதுடன், பக்தர்கள் முகம் சுளித்துச் செல்லும் வகையில் இருந்தது. இந்த நிலையில், இந்தக் குளத்தைத் தூர்வாரி தூய்மைப் படுத்தும் பணியை ஏற்றுக் கொண்டார்கள் நெல்லை உழவாரப் பணிக் குழுவினர். கடந்த ஜூன் மாதம் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இந்த குழுவினர் கோயில் குளத்தை சுத்தப்படுத்த களத்தில் இறங்கினர்.
இது குறித்து நெல்லை உழவாரப் பணிக் குழாமைச் சேர்ந்தவர்கள் கூறிய போது, தென்பாண்டிச் சீமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி நதிக்கரையில் பஞ்சகுருத்தலங்களில் ஒன்றாக விளங்குவது அருள்மிகு அரியநாத சுவாமி ஆலயம். இது சுமார் 1400 வருடங்களுக்கு முன்பு கூன் பாண்டியன் என்பவரால் முற்றுப் பெற்றது. இங்குள்ள ஈசன் அரியநாத சுவாமி, இன்றும் நமக்கெல்லாம் அருள்பாலித்து கொண்டிருக்கிறார்.
இந்தப் பெருமானுக்கு தொண்டு செய்பவர்கள், அவர்களின் குற்றங்களை நீக்கி, குறைகளைப் போக்கி, பையில் ஒரு கட்டு பணத்தையும் திணித்து, வாழ்த்தி அனுப்புவதைப் போன்ற அருளை உணர்வார்கள்.
தற்போது வரவிருக்கும் பெருஞ்சாந்தி விழாவினை முன்னிட்டு திருக் குளத்தை தூர் வாருவது பெரும் பேறு. குறிப்பாக வாஸ்துப் படி, ஒரு தலத்தின் திருக்குளம் கழிவு மண்டி, துப்புரவு இன்றிக் கிடந்தால், அங்குள்ள பெண்களுக்கு வயிற்று வலி, மாதவிலக்கு சிரமங்கள், கர்ப்ப் பை கோளாறுகள் என வெளியில் சொல்லாமலே, விளக்கம் தெரியாமலே நோவார்கள் என்று பெரியோர் கூறுவர்.
இதனால், இம்மக்களின் நன்மையை முன்னிட்டும், ஆலயத் திருக்குளத்தைப் பாதுகாக்கும் படியும் அரியநாதரின் திருக்குளத்தை துப்புரவு செய்யும் பணியில் நாங்கள் ஈடுபட்டோம்.. இந்தப் பணியில், கன்னியாகுமரியில் இருந்து 20 பேர், நாகர்கோவிலில் இருந்து 25 பேர், தூத்துக்குடியில் இருந்து 30 பேர், நெல்லை உழவாரப் பணிக் குழாமைச் சேர்ந்த 30 பேர், இந்து ஆலய பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்த 95 பேர் மற்றும் உள்ளூர்க்காரர்கள் சிலர் என 300க்கும் மேற்பட்டவர்கள் பெரும் ஈடுபாட்டுடன் கலந்து கொண்டார்கள். கோயிலையும் குளத்தையும் பாதுகாத்து, அனைவரும் இறையருள் பெற்று சுகமாய் வாழ வேண்டும் என்பதே நம் பிரார்த்தனை என்று குறிப்பிட்டார்கள்.