
ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. ஜூன் 15-ம் தேதி கூர்ம ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது
கூர்ம அவதாரம் (ஆமை) ஸ்ரீ மகாவிஷ்ணு எடுத்த இரண்டாவது அவதாரம் ஆகும். விஷ்ணுவின் கூர்ம அவதாரத்திற்காக இந்தியாவில் நான்கு ஆலயங்கள் அமைந்துள்ளன.
ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் கூர்மை, மற்றும் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கூர்மம், கர்நாடகாவில் சித்ரதுங்கா மாவட்டத்தில் உள்ள காவிரங்காபூர் மற்றும் மேற்கு வங்கம், ஹூக்ளி மாவட்டத்தில் கோகாட் கிராமத்தில் உள்ள சுவரூப்நாராயண் கோவில் ஆகியவை ஆகும்.
கூர்ம அவதாரம் யாரையும் அழிப்பதற்காக அல்ல. மேருமலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடையும் போது அதை தாங்கி நிற்பதற்காக எடுத்த அவதாரம் ஆகும். ஆனி மாத கிருஷ்ண பட்சத்தில், அதாவது தேய்பிறை துவாதசி திதியில் திருமால் கூர்ம அவதாரம் எடுத்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. வரும் 15-ம் தேதி கூர்ம ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.

ஆந்திரப் பிரதேசம் சித்தூர் மாவட்டத்தில் பலமனேர் அருகில் உள்ள கூர்மை கிராமத்தில் கூர்ம வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு கூர்ம அவதாரத்தில் பெருமாள் வீற்றிருக்கும் திருக்கோலத்தை தரிசிக்கலாம். மூலவரின் இடுப்புக்கு கீழ்ப்பகுதி ஆமை வடிவத்தில் உள்ளது. நான்கு கரங்களுடன் பெருமாள் வீற்றிருக்கிறார். பூதேவி தாயார் தனி சன்னதியில் வீற்றிருக்கிறார்.முன்புசுமார் 25 கி.மீ. சதுர பரப்பளவில் இக்கோவில் இருந்துள்ளது. அன்னியர் படையெடுப்பில் இருந்து கோவிலைக் காப்பாற்ற மண்ணால் மூடியுள்ளனர். அதன்பின்னர் கோவில் அமைப்பு மாறியது. தற்போதுள்ள கோயில் சிறியது. சித்தூரில் இருந்து பெங்களூரு நெடுஞ்சாலையில் 40 கி.மீ. தொலைவில் இக்கோயிலை அடையலாம்.
ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ காகுளம் மாவட்டத்தில் ஸ்ரீகாகுளத்தில் இருந்து 14 கி.மீ. தொலைவில் வங்கக் கடலின் ஓரத்தில் ஸ்ரீகூர்மம் என்ற கிராமம் உள்ளது.
இங்குள்ள கூர்ம வரதராஜ பெருமாள் கோவிலில் கூர்ம அவதார கோலத்தில் எம்பெருமான் வீற்றிருக்கிறார்.
மேற்கு நோக்கி நின்ற திருக்கோலம். ஸ்ரீ கூர்மநாயகி தாயார் தனி சன்னதி கொண்டுள்ளார். இக்கோயிலின் முன்புள்ள ஸ்வேத புஷ்கரணி என்ற மிகப்பெரிய குளத்தில் இருந்துதான் ஸ்ரீ கூர்மநாயகி தாயார் வெளிப்பட்டதாக நம்பப்படுகிறது. பகவத் ராமானுஜர் இக்கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்ட விவரம் கல்வெட்டு மூலம் தெரிய வருகிறது.