அமைச்சர் செந்தில்பாலாஜியின் இலாகாவை மாற்றி இருவருக்குப் பகிர்ந்து அளித்த பரிந்துரைக் கோப்புகளில் சில சந்தேகங்களை எழுப்பி திருப்பி அனுப்பினார் ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி.
செந்தில் பாலாஜி கவனித்து வந்த இரு இலாக்காகளில், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையும் ஒதுக்கீடு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாநில அமைச்சரவக் குழு கூடி தீர்மானித்த படி இது தொடர்பான ஆவணங்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் எனவும் பரிந்துரையில் குறிப்பிட்டு, அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழக அரசின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், சரியான காரணம் குறிப்பிடாததால், இலாகாவை பகிர்ந்து அளித்த பரிந்துரைக் கோப்புகளை ஆளுநர் ரவீந்திர நாராயண் ரவி திருப்பி அனுப்பினார். முக்கியமாக செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருப்பதால், அவர் கவனித்து வந்த துறைகள் மாற்றி அளிக்கப் படுவதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் வெறுமனே, ‘ஐ யாம் சஃபரிங் ஃப்ரம் ஃபீவர்’ என்று பள்ளிக் குழந்தைகள் லீவ் லெட்டர் எழுதுவது போல், செந்தில் பாலாஜிக்கு உடல் நலமின்றி மருத்துவமனையில் இருப்பதால் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு துறைகளை மாற்றி பரிந்துரை செய்து கோப்புகளை அனுப்பியிருக்கிறார்கள் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கோப்புகள் திருப்பி அனுப்பப் பட்டது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், அரசு அனுப்பி உள்ள பரிந்துரைகளில் ஆளுநர் ஒரு சில சந்தேகங்களை எழுப்பி திருப்பி அனுப்பினார்’ என்று தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளது.