மூன்று பிள்ளைகளுடன் மனைவி கிணற்றில் விழுந்து தற்கொலை..

Published:

விருதுநகர் மாவட்டத்தில் கணவர் இறந்த துக்கத்தில் மூன்று பிள்ளைகளுடன் மனைவி கிணற்றில் விழுந்து இன்று தற்கொலை‌செய்த சம்பவம் வத்திராயிருப்பு அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

IMG 20230617 WA0060 - 2026
#தற்கொலை செய்து கொண்ட மனைவி பாண்டீஸ்வரி இரு மகள்கள் வைத்தீஸ்வரி காளீஸ்வரி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே கோட்டையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன் (39). அவரது மனைவி பாண்டீஸ்வரி (35). இவர்களுக்கு வைத்தீஸ்வரி(16), காளீஸ்வரி (11), விக்னேஸ்வரன் (2) என 3 குழந்தைகள் உள்ளனர்.

தங்களுக்கு என இருந்த சிறிய நிலத்தில் விவசாயம் செய்து வந்ததோடு அவ்வப்போது கூலி வேலைக்கும் சென்று பிழைப்பு நடத்தி வந்தனர்.

இந்நிலையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக ஈஸ்வரனுக்கு உடலில் உப்புச்சத்து குறைபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக அவரால் சரிவர வேலைக்கு செல்ல முடியவில்லை. அதிலும் கடந்த இரு மாதங்களாக படுத்த படுக்கையாக நோய்வாய்ப்பட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒரு மாதமாக அங்கு தங்கி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த இரு தினங்களுக்கு முன் இறந்தார். இதனால் மனைவி, பிள்ளைகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தனர்.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

ஏற்கனவே மருத்துவச் செலவுகளால் மிகுந்த கடனுக்கு ஆளான அவர்கள், அவரது இறப்பால் வருமானம் இன்றி வாழ்வதற்கே வழியில்லாத நிலைக்கு ஆளாயினர்.

இதனால் மனமுடைந்த மனைவி பாண்டீஸ்வரி நேற்று காலை 8 மணிக்கு தனது 3 பிள்ளைகளுடன் வயலுக்கு சென்று அங்கிருந்த கிணற்றில் பிள்ளைகளை போட்டு, தானும் அதில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். அவ்வழியாக வயலுக்குச் சென்ற விவசாயிகள் சிலர் கிணற்றில் பிரேதம் மிதப்பதை பார்த்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு படையுடன் அங்கு சென்ற போலீசார் இறந்த உடல்களை மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img