
கோவில் வழிபடும் இடம். சுற்றுலாத் தலமல்ல என்பதை கோவில் நிர்வாகம் கவனித்தில் கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார் . அவரது அறிக்கை:
சில நாட்கள் முன்பு பழனி கோவிலில் இந்து அல்லாதோர் வர அனுமதியில்லை என்ற அறிவிப்பு பலகையால் விமர்சனம் எழுந்தது.
இதுபோன்ற அறிவிப்பு பல பிரபல கோவில்களில் பல ஆண்டுகளாக இருக்கிறது.
வேற்று மதத்தினர் இறைவனை வழிபட விரும்பினால் அவர்கள் கோவிலில் உள்ள பதிவேட்டில் இறைநம்பிக்கை உடன் வழிபட உறுதியை எழுத்து பூர்வமாக அளித்து விட்டு செல்ல அனுமதிப்பதும் நடைமுறையில் உள்ளது.
கோவில் காட்சி பொருளோ, சுற்றுலா இடமோ அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில் இந்து சமயம் அனைவரையும் அரவணைக்கவே விரும்புகிறது. இன்று ஜப்பான், இத்தாலி உள்பட பல வெளிநாட்டை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தமிழகம் வந்து முக்கியமான கோவில்களில் வழிபாடு நடத்தினார்கள் என்பதை பார்க்கிறோம்.
கூட்டத்தோடு கூட்டமாக வருபவர்களை என்ன செய்ய முடியும் என கேள்வி எழலாம். அவர்கள் இந்து சமய சின்னத்தோடு வருவதும், கோவிலில் தரும் பிரசாதமான விபூதி, குங்குமம், சந்தனம் போன்றவற்றை எவ்வாறு ஏற்கிறார்கள் என்பதிலிருந்து தெரிந்துவிடும்.
அதே சமயம் கோவிலில் நுழைந்து கோவிலின் புனிதத்தை கெடுக்கும் உள்நோக்கம் கொண்ட வேற்று மதத்தினர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வகை செய்ய வேண்டும்.
சில மாதங்களுக்கு முன்பு தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் ஒரு முஸ்லிம் குடும்பம் பிரியாணி சாப்பிட்டதும், ஒரு பெருமாள் கோவிலில் கிறித்துவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டது சமூக ஊடகங்களில் வைரலானது. இதுபோன்ற செயல் தற்செயலாக நடந்தது எனக்கூற முடியாது. திட்டமிட்டு கோவில் புனிதத்தை கெடுக்க செய்கின்றன செயலாகத்தான் பார்க்க முடியும். இப்படி அத்துமீறுபவர்கள் தண்டிக்க வேண்டும் .
அதுபோல மலைக்கோவிலுக்கு போவதற்கு வைத்துள்ள இழுவை ரயில் வசதி பக்தர்களுக்காக தான். அதில் வேற்று மதத்தினர் பொழுது போக்கிற்காக ஏறி பக்தர்களுக்கு இடையூறு செய்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் தான் பழனியில் அந்த அறிவிப்பு பலகை வைக்க நேரிட்டது.
எனவே இந்துக் கோவில் பாதுகாப்பு புனிதம் காக்க வேண்டிய கடமை கோவிலின் நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் உள்ளது என்பதை உணர்ந்து சேயல்பட வேண்டும் என்று இந்து முன்னனி சுட்டி காட்டுகிறது.