
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக வங்கக் கடலில் ரூ.80 கோடியில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று திமுக., அரசு அறிவித்தது. தற்போது நினைவுச் சின்னம் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடு தயாரிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் 2.21 ஏக்கரில் நினைவிடம் கட்டும் பணி தற்போது 39 கோடி ரூபாயில் நடந்து வருகிறது. இந்த நினைவிடம் வரும் ஆக. 7ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே ரூ. 80 லட்சம் செலவில் கருணாநிதி அருங்காட்சியம் அமையவுள்ளதாம். இதற்கான வேலை நடந்து வரும் நிலையில், பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் நினைவிடத் திறப்புக்குப் பிறகும் பணிகளைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வங்கக் கடலில் 134 அடி உயரத்துக்கு ரூ.80 கோடி செலவில் பேனா சினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது. மெரினா கடற்கரையில் இருந்து இந்தப் பகுதிக்குச் செல்வதற்காக 360 மீட்டர் நீளத்துக்கு பாலம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது. இதற்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தப் பாலத்தின் கட்டுமான பணிக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்க வேண்டும். இதை நேரடியாக பொதுப்பணித்துறையே மேற்கொள்வதா அல்லது தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்வதா என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.