மதுரை அருகே பரவை சத்தியமூர்த்தி நகர் அருள்மிகு ஸ்ரீ உச்சி மாகாளியம்மன் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்தி நகர் இந்து காட்டுநாயக்கன் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ உச்சிமாகாளி அம்மன், ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 21 ஆம் தேதி புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
நேற்று காலை நான்கு மணி அளவில் பிரம்ம முகூர்த்தத்தில் கணபதி பூஜை உடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின. மாலை 5 மணிக்கு நாடி சந்தானம் அங்குராற்பனம் நடைபெற்றது. புதன்கிழமை காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி பூர்ணாஹூதியுடன் நிறைவுற்ற யாகசாலை வேள்வியினை திருவேடகம் தேவஸ்தானம் ஜோசியர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்தனர்.
தொடர்ந்து கடம் புறப்பாடாகி திருக்கோவிலை வலம் வந்து கும்பத்தின் மேல் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. தொடர்ந்து ஸ்ரீ சக்தி விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ லட்சுமி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ கருப்புசாமி, ஸ்ரீ முனியாண்டி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.
தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோவில் முன்பாக அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரவை சத்தியமூர்த்தி நகர் இந்து காட்டுநாயக்கன் சமுதாயத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.