ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் ஆனி ஸ்வாதி விழாவில் முக்கிய நிகழ்வாக செப்பு தேரோட்டம் இன்று நடைபெற்றது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரியாழ்வார் சன்னதியில் ஆனி ஸ்வாதி திருவிழா உற்சவம் கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு மண்டபங்களில், பல்வேறு வாகனங்களில் பெரியாழ்வார் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி, வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக செப்பு தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக சுவாமி பெரியாழ்வார் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க செப்பு தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் திரு ஆனி சுவாதி உற்ஸவ செப்பு தேரோட்டம் இன்று காலை 7:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு செப்பு தேருக்கு பெரியாழ்வார் எழுந்தருளினார்.
அங்கு சிறப்பு பூஜைகளை அனிரூத் பட்டர் செய்தார். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் 7:15 மணிக்கு பக்தர்களின் கோவிந்தா, கோபாலா கோசத்திற்கு மத்தியில் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. கோயில் யானை ஜெயமால்யதா முன்செல்ல, நான்கு ரத வீதி சுற்றி வந்து சுமார் ஒரு மணி நேரத்தில் தேர் நிலையம் அடைந்தது. விழாவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் கிருஷ்ணன், ரமேஷ், மணியம் கோபி மற்றும் கோயில் பட்டர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர். டவுண் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பெரியாழ்வார் அவதரித்த ஆனி சுவாதி திருநாளான நாளை சாற்றுமுறை நடைபெறுகிறது.
இதே செப்புத் தேரோட்டம் பங்குனி மாதத்திலும் நடைபெறும். ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் நாச்சியார் – சுவாமி ரெங்கமன்னார் திருக்கல்யாணம் பங்குனி உத்திரம் நட்சத்திரத்தில்தான் நடைபெற்றது. இந்நாளில் இருவரும் காலையில் செப்புத்தேரில் வலம் வந்து, இரவில் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம்.