
தக்காளி விலை திடீர் உயர்வு கண்டதை அடுத்து, பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க, இடைத்தரகர் அற்ற விலையில், அரசின் நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்க ஏற்பாடு செய்துள்ளனர்.
சென்னையில் முதற்கட்டமாக 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை துவங்கியது. ரேஷன் கடைகளில் வெளிச் சந்தையை விட குறைவாக ஒரு கிலோ ரூ. 60க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரேஷன் கடைகளில் தக்காளி பெற எந்தக் கட்டுப்பாடும் இல்லை. குடும்ப அட்டைகளை காட்டவும் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தக்காளி கொள்முதல் விலையை விட விற்பனை விலை அதிகமாக உள்ளதற்குக் காரணம் கமிஷன் ஏஜன்ட்கள்தான் என்று புகார் எழுந்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக அதன் விலை உயர்ந்து வருகிறது. சென்னையில் 1 கிலோ தக்காளி 110 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளி விலை இந்த அளவுக்கு திடீர் என உயர்ந்தாலும் இந்த விலை உயர்வினால் விவசாயிகளுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 1 கிலோ தக்காளி 50 – 60 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதைப் பெட்டிகளில் அடுக்கி எடுத்து வந்து சென்னையில் இரண்டு மடங்கு விலையில் விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
மொத்த வியாபாரிகளே பெரும்பாலும் கமிஷன் ஏஜன்ட்களாக உள்ளதால் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லையாம்.