விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல், ஸ்ரீநின்றநாரராயணப் பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவம் திருவிழா தேரோட்டம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
பல்லாயிரமாண்டு பழமையானதும், 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், வைணவ – சைவ சமயங்களின் ஒற்றுமையை பறைசாற்றுவதும், குடவறை கோவிலாகவும், பாண்டிய மன்னர்களினால் திருப்பணி செய்யப்பட்ட கோவிலாகவும், ஆழ்வார்கள் மங்களாசாசனம் அருளப்பட்டதாகவும் பல்வேறு சிறப்புகளை கொண்டதும், ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் – ஸ்ரீசெங்கமலத்தாயார் எழுந்தருளி நல்லாசி புரியும் ஸ்தலமாகவும் இருப்பது திருத்தங்கல், ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில்.
திருத்தங்கல் ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரமோற்சவம் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான ஆனி பிரமோற்சவம் திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள், ஸ்ரீசெங்கமலத்தாயார் சிறப்பு அலங்காரத்தில் வாகனங்களில் எழுந்தருளி ரதவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.
ஆனி பிரமோற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருத்தேரோட்டம் இன்று காலை சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீநின்றநாராயணப் பெருமாளுக்கும், ஸ்ரீசெங்கமலத்தாயாருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து ஆனி தேரோட்டத்தை சிவகாசி சட்டமன்ற அசோகன் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்து கோலாகலமாக நடைபெற்றது. சிவகாசி, திருத்தங்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து கோவிந்தா, கோபாலா என்று பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு தேரிழுத்தனர். தேரின் முன்பு, ஏராளமான பெண் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடியபடியும், கோலாட்டம் ஆடியும் உற்சாகமாக வலம் வந்தனர்.
ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள், ஸ்ரீசெங்கமலத்தாயார் எழுந்தருளிய தேர் நான்கு ரதவீதிகளில் வலம் வந்து நிலைக்கு வந்து சேர்ந்தது. தேர் நிலைக்கு வந்து சேர்ந்தவுடன் சுவாமிக்கும், அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஆனி தேரோட்டம் திருவிழா ஏற்பாடுகளை கோவி்ல் நிர்வாகிகளும், நிகழ்ச்சி உபயதாரர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.
திருத்தங்கல், ஸ்ரீநின்றநாராயணப் பெருமாள் கோவில் ஆனி பிரமோற்சவம் தேரோட்டத்தை முன்னிட்டு சிவகாசி – விருதுநகர் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. சிவகாசியில் இருந்து விருதுநகர், மதுரை செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அனைத்தும் சிவகாசி, எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியிலிருந்து, செங்கமலநாச்சியார்புரம் வழியாக, வடமலாபுரம் ஆற்றுப்பாலம் வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு சென்று வந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு திருத்தங்கல் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.