
குற்றாலம் மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக குற்றால அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு அவ்வப்போது தடை விதித்திருந்தாலும் தண்ணீர் குறையும்பொழுது குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக குற்றாலத்தின் மெயின் அருவி ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு நலன் கருதி குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது. இன்று காலையும் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு நீடித்துள்ளதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி உள்ள நீர் தேக்கங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. குண்டாறு நீர் தேக்கம் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மணிமுத்தாறு அருவியில் குளிக்கத்தடை..

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவ மழைத் தீவிரமடைந்துள்ளதையடுத்து நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மூன்று நாட்களாக தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. இதையடுத்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் சாரல் மழையால் மணிமுத்தாறு அறிவிப்பு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். காலை 9 மணி முதல் சுற்றுலா பயணிகள் அருவியை பார்வையிட மட்டும் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் நீர்வரத்து குறைவதை பொறுத்து அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.