
திருநெல்வேலி -மதுரை இரட்டை ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்து.இந்த புதிய இரட்டை பாதையில்
புதிய ரயில்களை இயக்காத தெற்கு ரயில்வே . புதிய ரயில் இயக்க பொது மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த திருநெல்வேலி-மதுரை இடையேயான இரட்டை ரயில் பாதைப் பணிகள் நிறைவடைந்த போதும், பயணிகளுக்குப் போதுமான புதிய ரயில்களை இயக்கிட ரயில்வே நிர்வாகம் அக்கறை காட்ட வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்னக ரயில்வேயில் கடந்த 2018 முதல் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த மதுரை-திருநெல்வேலி இரட்டை ரயில் பாதைப் பணிகள் நிறைடைந்து கடந்த மார்ச்.,7 முதல் அனைத்து ரயில்களும் இரு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், ரயில் நிலையங்களில் முன் கூட்டி வந்த ரயில்கள் எதிரே வரும் ரயிலுக்காக காத்திருந்த நிலை மாறியுள்ளது. மேலும், பயண நேரமும் குறைந்துள்ளது. தற்போது ரயில் நிலையங்களுக்கு பல ரயில்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் மாவட்ட மக்கள் மற்றும் ரயில் பயணிகள் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கிட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் தேதியில் ரயில்வே கால அட்டவணை வெளியிடுவது வழக்கம். ஆனால், சமீபத்தில் சில ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் அக்டோபர் மாதம் கால அட்டவணையை வெளியிட்டு வருகிறது. கால அட்டவணைகள் தயாரிப்பதற்கு ரயில்வே நிர்வாகத்தில் உயர்மட்ட குழு உள்ளது. அக்குழு கூடி முடிவு செய்து, அதன் பரிந்துரைகளை இரயில்வே மண்டல மேலாளர் மூலம் ரயில்வே வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
2020-21 ரயில்வே வாரியத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு பரிந்துரைக்கப்பட்ட பல புதிய ரயில்கள் இயக்கப்படவில்லையென கூறப்படுகிறது. எனவே, புதிய ரயில்களை இயக்கிட ரயில்வே வாரியம் அறிவித்திட வேண்டுமென பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
குறிப்பாக,மதுரை-நெல்லை இடையே இரட்டை ரயில்பாதை பணிகள் முடிவு பெற்றதால், வடமாநிலங்களில் இருந்து மதுரை வரை வரும் ரயில்களை நெல்லை வரை நீட்டிப்பு செய்யவும், வடமாநிலங்களில் இருந்து கேரளா வழியாக நெல்லை வரை வந்து செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தையும் மதுரை சந்திப்பு ரயில் நிலையம் வரை நீட்டிப்பு செய்திட வேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் பொது மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், சேலம் கோட்டம், திருச்சி கோட்டத்திலிருந்து தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை வரை கூடுதலான ரயில்களை இயக்கிட வேண்டும். நீண்ட நாட்களாக சிறப்பு ரயில்களாக இயங்கும் ரயில்களை நிரந்தரமாக இயக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ஏற்கனவே, தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டத்தின் மூலம் இரயில்வே நிர்வாகத்திற்கு அதிக அளவிலான வருவாய் கிடைத்து வருகிறது. தென் மாவட்டங்களுக்கு நீட்டிப்பு ரயில்களை இயக்கிடும் பட்சத்தில் மேலும் கூடுதலான வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக : சிறப்பு ரயிலாக வாரத்தில் ஒரு நாள் மட்டும் இயக்கப்பட்டு வரும் நெல்லை-தாம்பரம் ( அம்பை, பாவூர்சத்திரம், தென்காசி, இராஜபாளையம், விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது) சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்கிட வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் மட்டும் வரும் மேட்டுப்பாளையம் -நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலை தினசரி ரயிலாக இயக்கிட வேண்டும்.
கொல்லம்-விருதுநகர்-மானாமதுரை-இராமேஸ்வரம் இடையே புதிய ரயில்களை இயக்க வேண்டும்.
புதிய வந்தே பாரத் ரயில்கள் : சென்னை-கன்னியாகுமரி வரையும் திருநெல்வேலியிலிருந்து -பெங்களூரு வரையும் செல்லும் வகையில் வந்தே பாரத் ரயில்களை இயக்கிட வேண்டும் என மத்திய அரசுக்கும் ரயில்வே அமைச்சகத்திற்கும் ரயில் பயணிகள் மற்றும் தென் மாவட்ட பொது மக்கள் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீட்டிப்பு ரயில்கள் : திண்டுக்கல் -மதுரை வரை இயங்கும் பயணிகள் ரயிலை நெல்லை வரையும், மதுரை-ஜெய்ப்பூர் வரை இயங்கும் பிகானியர் எக்ஸ்பிரஸ் ரயிலை நெல்லை வரையும், சண்டிகர்-மதுரை வரை இயங்கும் சண்டிகர் எக்ஸ்பிரஸ் ரயிலை தூத்துக்குடி வரையும், மதுரை-சென்னை செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை திருநெல்வேலியிலிருந்து புறப்படும் வகையிலும் நீட்டிப்பு செய்திட வேண்டும். விழுப்புரம்-மதுரை பயணிகள் ரயிலை செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். சேலம்-கரூர்-திருச்சி வரை இயங்கும் பயணிகள் ரயிலை திருச்செந்தூர் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். போடி-மதுரை வரை இயங்கும் பயணிகள் ரயில் வண்டியை தூத்துக்குடி மற்றும் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். கோவை-மதுரை வரை இயங்கும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரசை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.
டெமு ரயில்கள் : மானாமதுரை-மன்னார்குடி வரை செல்லும் டெமு ரயிலை விருதுநகர் சந்திப்பு வரை நீட்டிப்பு செய்திட வேண்டும்.
புதிய இணைப்பு ரயில் : செங்கோட்டை-மதுரைக்கு அதிகாலை நேரத்தில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு புதிய இணைப்பு ரயில் விட வேண்டும்.
தினசரி ரயில்கள் : கேரள மாநிலம் எர்ணாகுளம்-வேளாங்கன்னி வரை இயங்கும் சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக மாற்றி இயக்க வேண்டும். குருவாயூர்-புனலூர் வரை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரை வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் தினசரி ரயிலாக இயக்கப்படும் என அறிவித்தபோதும் மின்மயமாக்கும் பணியை காரணம் காட்டி அதை நடைமுறைப்படுத்த சுணக்கம் காட்டி வருகிறது.
அறிவிக்கப்பட்ட ரயில்கள் : அறிவிக்கப்பட்ட திருப்பதி-கொல்லம் விரைவு ரயிலை உடனே இயக்கிட வேண்டும். 2018இல் அறிவிக்கப்பட்ட தாம்பரம்-செங்கோட்டை அந்தியோதயா ரயிலையும் காலதாமதமின்றி இயக்கிட வேண்டும்.
கேரளா வழியாக செல்லும் ரயில்கள் : நெல்லையிலிருந்து குஜராத் மாநிலம் ஜாம் நகருக்கு செல்லும் விரைவு ரயிலை மதுரையிலிருந்து புறப்படச் செய்திட வேண்டும்.
நெல்லையிலிருந்து பிளாஸ்பூர் வரை செல்லும் விரைவு ரயிலை மதுரை சந்திப்பிலிருந்து இயக்கிட வேண்டும்.